திருச்சி 60-வது வார்டு பகுதிக்கு உட்பட்ட E.B காலணி சாலையில் உள்ள பாதாள சாக்கடையில் அடைப்பு ஏற்பட்டு சாக்கடை கழிவு நீர் சாலையில் ஆறுபோல் வழிந்தோடியது. மேலும் துர்நாற்றம் வீசிய கழிவு நீரை கடந்த சென்ற வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 60-வது வார்டு மாமன்ற உறுப்பினர் காஜா மலை விஜய் அவர்களிடம் பாதாள சாக்கடை பிரச்சனை தீர்வு காணும் படி கோரிக்கை வைத்தனர்.
பொது மக்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக சம்பவ இடம் வந்த கவுன்சிலர் காஜாமலை விஜய் மாநகராட்சி அதிகாரிகளுக்கு தொலைபேசி மூலம் பாதாள சாக்கடையை சீர்படுத்தி தரும் படி அறிவுறுத்தினார்.
அதன் அடிப்படையில் அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் உடனடியாக பாதாள சாக்கடையில் உள்ள அடைப்புகளை மாநகராட்சி நவீன இயந்திரம் மூலம் சரி செய்தனர். மேலும் அப்பகுதியில் உள்ள சாக்கடையில் தேங்கி இருந்த குப்பை கழிவுகளை அகற்றி சுத்தம் செய்தனர். இந்த பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை அங்கேயே நின்று பணிகளை ஆய்வு செய்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பாக திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டத்தில் நடந்த விவாதத்தின் போது பாதாள சாக்கடை பிரச்சனை குறித்து பேசி அதற்கு உடனடி தீர்வு காண வேண்டும் என கோரிக்கை வைத்து வெளிநடப்பு செய்தார். இந்நிலையில் அதே பொதுமக்கள் பிரச்சனைக்காக களத்தில் இறங்கி மக்கள் பணி ஆற்றிய கவுன்சிலர் காஜாமலை விஜய்க்கு அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்களின் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.