தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருச்சி மாநகரம் கோட்டை மற்றும் காந்திமார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவும், ஒழுங்குபடுத்தவும் போக்குவரத்து பிரிவு காவல் உதவி போலீஸ் கமிஷனர் தலைமையில் 2 காவல் ஆய்வாளர்கள், 6 சார்பு ஆய்வாளர்கள், 60 காவலர்கள், 20 ஊர்காவல் படையினரும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
அந்த அடிப்படையில் இருசக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு தெப்பக்குளம் அஞ்சல் அலுவலகம் பின்புறமுள்ள பனானா லீப் அருகிலுள்ள மாநகராட்சிக்கு சொந்தமான மைதானம், தெப்பக்குளம் பிஷப் ஹீபர் பள்ளி மைதானம் மற்றும் கோட்டை ரயில்வே ஸ்டேஷன் ரோடு பார்க்கிங் மைதானமும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இருசக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு சிங்காரத்தோப்பு சூப்பர் பஜார் மற்றும் யானைகுளம் மைதானம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நான்கு சக்கர வாகனங்கள் மட்டும் நிறுத்துவதற்கு வி. பி.ரோடு கெயிட்டி திரையரங்கம் உட்புறமுள்ள கார் நிறுத்துமிடம் மற்றும் ரோடு (சோபிஸ் கார்னர்) இறுதியில் உள்ள ரயில்வே மைதானம் ஆகிய இடங்கள் என மொத்தம் 6 இடங்களில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
மேலும் பொதுமக்கள் முன்பின் தெரியாதவர்களிடம் தங்களது உடைமைகளை ஒப்படைக்க வேண்டாம் என்றும், சந்தேகப்படும்படியான நபர்கள் வந்தால் அருகில் உள்ள காவல்துறையினருக்கு தெரிவிக்க வேண்டுமென்றும், காவலர் என்று கூறிக்கொண்டு தங்கள் நகைகளை பத்திரமாக பொட்டலத்தில் மடித்து தருகிறேன் என்று கூறுபவர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் காவல் துறை சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.மேற்கண்ட பாதுகாப்பு பணிகளுக்காக திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன்மேலான உத்தரவின்படி, திருச்சி மாநகர வடக்கு காவல் துணை ஆணையர் அன்பு நேரடி கண்காணிப்பில் சட்டம் ஒழுங்கு, குற்றத்தடுப்பு மற்றும் போக்குவரத்து ஒழுங்குபடுத்தும்பணிகளுக்காக 4 உதவி ஆணையர்கள், 12 காவல் ஆய்வாளர்கள், 76 சார்பு ஆய்வாளர்கள், 372காவல் அலுவலர்கள், 100 ஆயுதப்படை காவலர்கள் மற்றும் 145 ஊர்க்காவல் படையினர் எனமொத்தம் 710 காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள்பாதுகாப்பு பணிக்கு நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.