திருச்சியில் இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளிக்கையில்..
கடந்த 8 ஆண்டு கால பாஜக தலைமையிலான மோடி அரசு நாட்டின் மதச்சார்பின்மை கொள்கைகளை சீர்குலைத்து விட்டது. வடமாநிலங்களில் சிறுபான்மையினர்களது வீடுகள் இடிக்கப்படுகின்றன. விவசாயிகள் தங்களது உரிமைகளுக்காக வருடக்கணக்கில் போராடிய அவலம் மோடியின் ஆட்சிகாலத்தில் அரங்கேறி உள்ளது. வருடத்துக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை தருவதாக மோடி தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த அடிப்படையில் இதுவரை 16 கோடி பேருக்கு வேலை கொடுத்து இருக்க வேண்டும். ஆனால் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்து வருகிறது. வெளிநாட்டிலிருந்து கருப்பு பணங்களை மீட்டு வருவதாக மோடி வாக்குறுதி அளித்தார். அதுவும் எங்கே என்று தெரியவில்லை. அத்தியாவசிய பொருட்களின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துக்கொண்டே வருகிறது.
தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான அரசு மதச்சார்பற்ற கொள்கைகளை சிறப்பாக நடைமுறைப்படுத்தி வருகிறது. நடந்துமுடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணிக்கு ஒதுக்கிய இடங்களில் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்கள். மாநில அளவில் திமுக தனது கூட்டணி கட்சியினருடன் சுமுகமான உறவில் உள்ளநிலையில், மாவட்ட வாரியாக திமுக வினரின் செயல்பாடுகள் வருத்தமளிப்பதாக உள்ளது. இதனை ஏற்றுக்கொள்ள முடியாது என முத்தரசன் தெரிவித்தார்.
மேலும் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையில்…
நாட்டின் பிரதமர் தமிழ்நாட்டு திட்டங்களை துவங்கி வைக்க வருகிறார். அந்த நிகழ்ச்சியில் முதல்வர் கலந்து கொண்டு மாநிலக் கோரிக்கைகளை முன்வைத்தார் இதில் தவறு இல்லை. விலையை ஏற்றியவர்கள்தான் அதனை மறுபரிசீலனை செய்து இன்னும் பெருமளவில் விலை குறைக்க வேண்டும். ஜிஎஸ்டி – க்குள் கொண்டு வருவதற்கும் இதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. பிரதமர் நரேந்திர மோடி,நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் எண்ணெய் நிறுவனங்கள்தான் விலையை நிர்ணயிக்கின்றன என்று கூறி வந்தனர். இப்போது விலையை குறைத்துள்ளனர். அப்படி என்றால் மத்திய அரசின் கையில் விலையை குறைப்பதற்கான அதிகாரம் உள்ளது. உயர்ந்த பதவியில் உள்ள பிரதமர் பொய் சொல்லக்கூடாது என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள் என்றார்.
*பெட்ரோலுக்கு மாநில அரசு வரி போட முடியாது என முத்தரசன் கூறினார்* *நானும் இந்து தான்.*
நான், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி, பாலகிருஷ்ணன் போன்றோர் இந்து மத எதிர்ப்பாளர்கள் இல்லை. இந்துத்துவாவிற்கு தான் எதிரானவர்கள்.நாம் எல்லோரும் இந்து மதம் தான். இந்துத்துவா என்பது மனுதர்மத்தின் கொள்கை. இந்து மதத்தின் கொள்கை மனுதர்ம கொள்கை அல்ல. இந்து மதத்தின் பெயரால் மனுதர்ம கொள்கையை திணிக்க பார்க்கிறார்கள்.மனுதர்ம கொள்கை தான் புதிய கல்விக் கொள்கை. புதிய கல்விக்கொள்கை குலக்கல்வி திட்டத்தை ஆதரிக்கிறது.ராஜாஜி குலக்கல்வி திட்டத்தை கொண்டு வந்தார். அப்போது கடுமையாக கம்யூனிஸ்ட் கட்சி எதிர்த்தது. ராஜாஜி நாணயமான மனிதர் மோடி மாதிரி “சால்சாப்பு” செய்பவர் அல்ல திட்டத்தை திரும்பப் பெற்றார் என முத்தரசன் தெரிவித்தார்.