மேட்டூர் அணையில் இருந்து நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட உள்ள நிலையில் முன்னதாக டெல்டா மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதலமைச்சர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து திருச்சி விமான நிலையத்தில் பத்திரிக்கையாளருக்கு அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது;-வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரும் வகையில் தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறோம். வேளாண் துறைக்கு தனி கவனத்தை இந்த அரசு செய்து வருகிறது.டெல்டா மாவட்டங்களில் நிலக்கரி சுரங்க ஏல அறிவிப்பை ஒன்றிய அரசு அறிவித்த உடன் அதனை தமிழ்நாடு அரசு எதிர்த்தது. அதை அனுமதிக்க மாட்டோம் என சட்டமன்றத்தில் தெரிவித்தேன். அதனையடுத்து ஒன்றிய அரசு அதை ரத்து செய்தது. டெல்டாவின் உரிமைகளை விட்டுக் கொடுக்காத அரசாக தி.மு.க அரசு செயல்படும். காவேரி பாசன பகுதிகளில் உள்ள கால்வாய்களை தூர்வார கடந்த 2021-2022 ஆம் ஆண்டில் ரூ.62.91 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. 3889 கி.மீ தூர்வாரப்பட்டது.

4.90 லட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியும், 13.341 லட்சம் ஏக்கர் சம்பாசாகுபடியும், 39,73000 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்து சாதனை செய்தோம். அதை சாதனை என்பதை விட வேளாண் புரட்சி என கூறலாம். அதன் தொடர்ச்சியாக 2022-2023 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் 80 கோடி ரூபாய் தூர்வார நிதி ஒதுக்கப்பட்டு, பணிகள் துரிதமாக நடந்தது. மே மாதமே மேட்டூர் அணை திறக்கப்பட்டது. இதன் விளைவாக 5.36 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13.53 லட்சம் ஏக்கர் சம்பா சாகுபடியும் நடைபெற்றது. இதன் விளைவாக 41.45 லட்சம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு வேளாண் புரட்சி தொடர்ச்சியாக நடந்தது. இந்தாண்டும் இதே போல திட்டமிடல் செய்யப்பட்டு ரூ.90 கோடி தூர்வார ஒதுக்கப்பட்டது. தற்போது 96 விழுக்காடு பணிகள் முடிக்கப்பட்டு விட்டது. மீதமுள்ள பணிகள் சில நாட்களில் முடிவடையும்.

ஜீன் 12 ஆம் தேதி மேட்டூரில் தண்ணிர் திறக்கப்பட உள்ளது. சென்ற ஆண்டுகளில் சாதித்து காட்டியதை போலவே மேட்டூர் அணை நீர் காவேரி டெல்டா பகுதிக்கு வருவதற்கு முன்பாகவே தூர்வாரும் பணிகள் நிறைவடையும். டெல்டா விவசாயிகள் தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்தி நெல் உற்பத்தியில் புதிய சாதனை படைப்பார்கள் என நான் உறுதியாக நம்புகிறேன். தி.மு.க ஆட்சியில் வேளாண் உற்பத்தியும், பாசன பரப்பும் அதிகமாகி இருப்பது வேளாண் துறையில் புரட்சியை காட்டுகிறது. இந்த பணியை தொடர்ச்சியாக செய்து மண்ணையும் மக்களையும் காப்போம்.

கர்நாடகாவில் புதிதாக அமைந்துள்ள காங்கிரஸ் அரசு மட்டுமல்ல ஏற்கனவே இருந்த அரசுகளும் மேக தாதுவில் அணை கட்டுவோம் என தான் தொடர்ந்து கூறி வந்தார்கள் அப்போது இருந்தே நாம் எதிர்ப்பு தெரிவித்து வந்தோம். தொடர்ந்து அதை எதிர்ப்போம். மேகதாது விவகாரத்தில் அணை கட்டக்கூடாது என்பதில் கலைஞர் எப்படி உறுதியாக இருந்தாரோ அதே உறுதியோடு இந்த ஆட்சி இருக்கும். அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். பயிர் காப்பீட்டை அரசே ஏற்று நடத்துவது குறித்து ஆய்வு செய்து வருகிறோம்.சட்டசபையில் நிறைவேற்றிய மசோதாக்களை ஆளுனர் கிடப்பில் போட்டுள்ளது தொடர்பாக நீதிமன்றத்தை நாடலாமா என சட்ட வல்லுநர்களோடு ஆலோசித்து வருகிறோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்