திருச்சி மாவட்டம் துறையூரை சேர்ந்த ரோஷினி என்பவர், கடந்த 14ம் தேதி அவரது வீட்டில் ஏற்பட்ட சிறு பிரச்சனைகளால், மனமுடைந்து வீட்டை விட்டு வெளியேறியதாக கூறப்படுகிறது. அப்போது ஜீயபுரம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் உள்ள முத்தரசநல்லூர் என்ற ஊரில் சென்று கொண்டிருக்கும் போது திடீரென வலிப்பு வந்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நிலையில் இருந்துள்ளார்., இதனை அறிந்த ஜீயபுரம் காவல் நிலைய ஆய்வாளர் பாலாஜி மற்றும் காவலர்கள் சரவணகுமார், கார்த்தி பெண் காவலர்கள் கீதா, சுலோச்சனா ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அப்பெண்ணிற்கு முதலுதவி செய்து அந்தநல்லூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மேலும் அப்பெண்ணிற்கு நினைவு திரும்பியபின் அவரிடம் விசாரித்து பெற்றோரிடம் ஒப்படைத்தனர். இதனை அறிந்த மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாலகிருஷ்ணன் மனித நேயத்துடன் சிறப்பாக செயல்பட்ட காவலர்களை நேரில் அழைத்து பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.