தமிழகத்தில் நடந்து முடிந்த உள்ளாட்சித் தேர்தலில் அதிகபடியான இடங்களில் திமுக வெற்றிபெற்றுது. திருச்சியில் மாநகராட்சி மேயராக அன்பழகன் பொறுப்பேற்றுக் கொண்டார். அன்றிலிருந்து இரவு பகலாக மக்கள் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த மாதம் திருச்சியில் முதன் முறையாக நடந்த மாநகராட்சி கூட்டத்தில் கலந்துகொண்ட மாமன்ற உறுப்பினர்கள் கால்நடைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு தீர்வுகாண கோரிக்கை வைத்தனர். இதற்கு தீர்வுகாணும் முயற்சியில் மாநகராட்சி மேயர் அன்பழகன் மாநகராட்சி அதிகாரிகளுடன் இணைந்து தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்.
இதுகுறித்து மாநகராட்சி மேயர் அன்பழகன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில்:-
திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் இடையூறாக சாலையில் சுற்றித்திரியும் கால்நடைகளான மாடுகள், பன்றிகள் தெரு நாய்கள் ஆகியவற்றால் ஏற்படும் தொல்லைகள் குறித்த கோரிக்கைகளை கடந்த மாமன்றக் கூட்டத்தில் மாமன்ற உறுப்பினர்கள் மாநகராட்சி மேயராகிய என்னிடம் கோரிக்கை வைத்தனர்.
அதனைத் தொடர்ந்து மாமன்ற உறுப்பினர்களின் கோரிக்கைகளை ஏற்று தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களிடம் தெரிவித்ததின் பேரில் மாநகராட்சி கமிஷனர் முஜிபுர் ரஹ்மானுக்கு கால்நடைகளால் பொதுமக்களுக்கு ஏற்படும் தொந்தரவுகளுக்கு உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு பிறப்பித்தார்.
அதன் அடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பன்றிகளை பிடிக்கும் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு இன்று காலை ஸ்ரீரங்கம் 10- வார்டு பகுதியில் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர் அப்போது 25-க்கும் மேற்பட்ட பன்றிகள் பிடிக்கப்பட்டுள்ளது. இவைகள் அனைத்தும் செம்பட்டு காட்டு பகுதியில் விடப்படுவதாக தெரிவித்தார்.
மேலும் திருச்சி மாநகராட்சியில் உள்ள 5 கோட்டங்களில் தெரு நாய்களுக்கான கருத்தடை மையங்கள் அமைக்கப்பட உள்ளதாகவும், தற்போது மாநகர பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்க துரித நடவடிக்கை எடுத்து வருவதாகவும், சத்திரம் பேருந்து நிலையம் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக போடப்பட்டுள்ள ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.