திருச்சி அருகே நங்கவரம் ஒத்தக்கடை தென்கடைக்குறிச்சி பகுதியில் உள்ளது ஸ்ரீலஸ்ரீ பாலசுப்ரமணியன் நம்பூதிரி என்கிற தேஜஸ் சுவாமிகளின் ஸ்ரீ தட்ஷீண காளி சித்தர் பீடம் இதில் தேஜஸ் சுவாமிகள் உலக அமைதிக்காவும், வரும் புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமையவும் சமாதி நிலை தியானம் மேற்கொள்வதாக அறிவித்திருத்தார்.
இதன்படி, இன்று மதியம் சமாதி நிலை மேற்கொண்டார். முன்னதாக செய்தியாளர்களிடம் கூறும் போது,
வரக்கூடிய 2023 புத்தாண்டில் கொரோனா போன்ற புதுவித நோய்கள் பரவுவதற்கும், இயற்கை சீற்றங்களுக்கும் வாய்ப்புள்ளது. இவற்றிலிருந்து பொதுமக்களை காப்பதற்காகவும், பேரழிவு ஏற்படாமல் தடுப்பதற்காகவும், ஜி -20 நாடுகளுக்கு தலைமையேற்றுள்ள இந்தியா அனைத்து துறைகளிலும் உலகளவில் முன்னேற்றம் காண வேண்டியும் மத்திய, மாநில அரசுகளால் நாட்டு மக்களின் ஆரோக்கியம், பொருளாதார நிலை மேம்படுவதற்காகவும் ஸ்ரீதட்சண காளி சித்தர் பீடம் சார்பில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட உள்ளன.
இதன் ஒரு பகுதியாக, பவுர்ணமி தினமான டிசம்பர் 7-ம் தேதி காற்று புக முடியாத, பாதாள அறைக்குள் சமாதி நிலைக்குச் சென்று பல மணி நேரத்துக்குப் பிறகு மீண்டும் உயிருடன் வரக்கூடிய சமாதி தியானம் மேற்கொள்ள உள்ளேன் என்று தெரிவித்தார். மேலும் அவர் கூறும் போது மனிதர்களின் கர்ம வினைகள் அகலமும் தர்மம் செழிக்கவும் இந்த சமாதி யோகத்தை மேற்கொள்கிறேன் பல ஆண்டுகளாக இந்த யோகத்தை நான் செய்து வருகின்றேன். சித்தர்களும் மகான்களும் இந்த சமாதி நிலை தியானத்தை பல ரூபங்களில் செய்து வருகின்றனர். பாதாள அறைக்குள் சென்றபின் பிரபஞ்சத்தோடு பேசத் தொடங்கி விடுவேன். அந்த சூட்சமங்களை இங்கு சொல்ல முடியாது.
தெரியாமல் செய்யும் பாவங்களை நாம் செய்யும் தர்மம் காக்கும்.இங்கு பயத்தினால் வரும் பக்தியே அதிகமாக இருக்கிறது.தவறுகளை திருத்திக் கொள்ள வேண்டும். இல்லையெனில் கொரோனா வைரஸ் போன்று இயற்கை சீற்றங்கள் பேரிடர்கள் தொடரும் வாய்ப்பு உள்ளது என்றார். இந்நிலையில் இரவு சாமியின் சமாதி தியானம் குறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது அதனைத் தொடர்ந்து காவல்துறையினர் கோவிலுக்கு வந்து சமாதி தியானம் மேற்கொண்ட தேஜஸ் சுவாமியை போலீசார் வெளியே அழைத்து வந்தனர்.