எல்.பி.எப்., சி.ஐ.டி.யு., ஏ.ஐ. டி.யூ.சி, எச்.எம்.எஸ்., ஐ.என்.டி.யூ.சி, ஏ, ஐ.சி.சி. டி. யு என்பன உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்கம் சார்பாக இன்று திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரியார் சிலை அருகே இருந்து சாலை மார்க்கமாக நடந்து வந்து திருச்சி ரயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டத்தில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள், கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் அவர்களை இரும்பு தடுப்புகள் மற்றும் கயிறுகளை அமைத்து ரயில் நிலையத்திற்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தினார்கள். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டத்தில் ஈடுபட்ட அனைத்து தொழிற்சங்கத்தினரும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் காரசார வாக்குவாதம் நிகழ்ந்தது. அதனை தொடர்ந்து ஒரு சிலர் ரயில் நிலைய வளாகத்தில் அமர்ந்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல் திருச்சி ஏஐடியுசி தொழிற்சங்கம் சார்பில் மாவட்ட பொதுச்செயலாளர் சுரேஷ் தலைமையில் மாவட்ட தலைவர் நடராஜா, தரைக்கடை சங்க மாவட்ட பொதுச்செயலாளரர் அன்சருதீன்,
போக்குவரத்து தொழிற்சங்க தலைவர் நேரு துரை, ஆட்டோ தொழிற்சங்க தலைவர் சத்யா, மாணவர் பெருமன்ற மாவட்ட செயலாளர் இப்ராகிம் மற்றும் பெண்கள் உள்ளிட்டோர் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.
இதேபோல் பொதுத்துறை தனியார் மயமாக்காதே, மின்சார சட்டத் திருத்தத்தை கொண்டு வராதே, விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்று, போன்றவற்றை முன்வைத்து மக்கள் அதிகாரம் புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணி மக்கள் கலை இலக்கியக் கழகம் தோழர்கள் இணைந்து ஊர்வலமாக வந்து ஜங்ஷன் ரயில் நிலையத்தில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் மக்கள் அதிகாரம் மாநில துணைச் செயலாளர் செழியன், திருச்சி நகர செயலாளர் ராஜா இணைச் செயலாளர் ஆனந்த் மற்றும் மகஇக மாவட்ட செயலாளர் ஜீவா, மகஇக கலைக் குழு பொறுப்பாளர் லதா மற்றும் புஜதொமு மாவட்ட தலைவர் கோபி, மற்றும் நிர்வாகிகள் மறியல் போராட்டத்தில் கலந்து கொண்டு கைது செய்யப்பட்டனர்.
இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் கூறியதாவது;-அகில இந்திய அளவில் வேலை நிறுத்த போராட்டம் இன்றும் நாளையும் அறிவித்தபடி இன்று திருச்சி மாவட்டத்தில் நடைபெற்று வருகிறது. குறிப்பாக தொழிலாளர் சட்டத் தொகுப்பு நான்கையும் கைவிட வேண்டும். மின்சார திருத்தச் சட்டத்தை திரும்ப பெற வேண்டும். தேசிய பணமாக்கும் கொள்கை உள்ளிட்ட எந்த பெயராலும் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க கூடாது. வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் இல்லாத குடும்பங்களுக்குச் மாதம் ஒன்றுக்கு ரூ.7500 நிவாரணம் வழங்க வேண்டும். கட்டுமான உடலுழைப்பு தொழிலாளர்கள் அனைவருக்கும் விரிவான சமூக பாதுகாப்பு திட்டங்களை அமலாக்க வேண்டும்.
அங்கன்வாடி சத்துணவு மற்றும் இதர திட்ட ஊழியர்கள் குறைந்தபட்ச ஊதியத்தையும் சமூக பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும். தொடர்ந்து மத்திய அரசு பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் அநீதியை செய்து வருகிறது. பெட்ரோல் விலையை குறைக்க வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பதனை வலியுறுத்தி இந்தத் தொடர் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. எங்கள் கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் இன்னும் அதிகமான போராட்டங்களைக் கையில் எடுப்போம் இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட அனைவரையும் போலீசார் ரயில் நிலையத்திலிருந்து பேருந்துகள் மூலமாக கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக ரயில் நிலைய வளாகத்தில் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.