கொரோனா வைரஸ் தொற்று தமிழகத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் இக்காலக்கட்டத்தில் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், மற்றும் தூய்மை பணியாளர்கள் இடைவிடாது தங்களது பணியை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் திருச்சி பெரிய கடை வீதி பகுதியில் இன்று காலை சாக்கடை அல்லும் பணியில் ஈடுபட்டிருந்த முன் களப்பணியாளர்களாகிய தூய்மைப் பணியாளர்களுக்கு முறையாக எந்த ஒரு பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படவில்லை. மேலும் கொரோனா அச்சம் உள்ள இக்காலக்கட்டத்தில் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது முன் களப்பணியாளர்களாக பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்களை திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் மனசாட்சியே இல்லாமல் மோசமாக நடத்தி வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்ட நாள் முதல் இன்று வரை தூய்மை பணியாளர்களின் பணி மிக மிக முக்கியமானவை ஆகும். அது போன்று பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்கி கவுரவித்து வருகிறது.குறிப்பாக தமிழகத்தின் முதல்வராக மு.க ஸ்டாலின் பொறுப்பேற்றதும் அனைத்து அமைச்சர்கள் மற்றும் அனைத்து துறை அரசு அதிகாரிகளுக்கும் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபடுங்கள் என உத்தரவிட்டார். ஆனால் முதல்வரின் உத்தரவை காற்றில் பறக்கும் விதமாக திருச்சி மாநகராட்சி அதிகாரிகள் முன் களப்பணியாளர்களாகிய தூய்மைப் பணியாளர்களின் நலனில் அக்கறை கொள்ளாமல் இருப்பது மிகுந்த வேதனை அளிப்பதாக உள்ளது. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரையில் இரண்டு அமைச்சர்கள், இரண்டு எம்பிகள், எம்எல்ஏக்கள், மாவட்ட கலெக்டர் மாநகராட்சி கமிஷனர் உள்ளிட்டோர் உடனடியாக தலையிட்டு முன் களப்பணியாளர்களாகிய தூய்மை பணியாளர்களுக்கு உடனடியாக பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும் மேலும் தங்களின் உயிரையும் பொருட்படுத்தாது மக்களின் நலனுக்காக சாக்கடையில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏதும் இன்றி இறங்கி கழிவுகளை அல்லும் இவர்களுக்கு அரசு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதே தூய்மைப் பணியாளர்களின் ஒட்டுமொத்த கோரிக்கையாக உள்ளது.