திருச்சி மாநகராட்சியின் 5 -வது மண்டலத்துக்குட்பட்ட 27 -வது வார்டு சங்கீதாபுரம் ஆரோக்கிய அன்னை ஆலயம் பகுதியில் நடைபெற்ற பகுதி சபா கூட்டம் மேயர் அன்பழகன் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் , சங்கீதபுரம் , பள்ளிவாசல் தெரு, பாத்திமா தெரு, சவேரியார் கோவில் தெரு , தென்னூர், பட்டாபிராமன் பிள்ளை தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மனுக்களை மேயரிடம் அளித்தனர் . பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப் படும் என மேயர் தெரிவித்தார் . இதனைத் தொடர்ந்து 27 வது வார்டு பகுதிகளுக்கு முடிவுற்ற திட்ட பணிகளையும், நலத்திட்டங்களையும் மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் திட்ட பணிகளையும் பொதுமக்களிடம் மேயர் அன்பழகன் விளக்கமாக எடுத்துரைத்தார்.

மேலும் திருச்சி மாநகராட்சியில் நடைபெற்று வரும் பாதாள சாக்கடை திட்டம், சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் வழங்கும் திட்டம், புதிதாக போடப்பட்டுள்ள சாலைகள் மாநகர பகுதிகளில் நடைபெற்று வரும் புதிய திட்டப் பணிகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்து கூறினார். திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 65 வார்டு பகுதிகளிலும் துணை மேயர், மண்டல தலைவர்கள், மாமன்ற உறுப்பினர்கள், நகரப் பொறியாளர், செயற்பொறியாளர்கள், உதவி ஆணையர்கள், உதவி செயற்பொறியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், நிர்வாக அலுவலர்கள், உதவி வருவாய் அலுவலர்கள் ஆகியோர் முன்னிலையில் அந்தந்த வார்டுக்கு உட்பட்ட பகுதி சபா கூட்டம் நடைபெற்று பொதுமக்களிடம் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றனர். தகுதியுள்ள மனுக்களுக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. இந்த கூட்டத்திற்கு முன்னதாக மனித உரிமைகள் தின உறுதி மொழியை மேயர் அன்பழகன் தலைமையில் மாநகராட்சி அலுவலர்கள் பணியாளர்கள், பொதுமக்கள் எடுத்துக்கொண்டனர்.
