இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார்.
அவர் கூறுகையில்: தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களை புணரமைக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், திருச்செந்தூர், சோளிங்கர், மருதமலை உள்ளிட்ட கோவில்களை தனியார் நிறுவனத்திடம் அளித்து தேவையான வசதிகளை ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும், மருதமலை கோவிலில் வயதில் முதியவர்களின் வசதிக்காக மின் தூக்கி அமைக்க திட்டமிடப்பட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று தெரிவித்த அமைச்சர், இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்த கோவில்களில் கடந்த அதிமுக ஆட்சியில் 47 கோவில்கள் மட்டுமே பிரசித்திப்பெற்ற கோவில்களாக கருதப்பட்டன என்றும் தற்போது 539 கோவில்கள் கண்டறியப்பட்டுள்ளதோடு, அவற்றை சீரமைத்து மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.
தமிழகத்தில் முக்கிய மலைக் கோவில்களான திருத்தணி, சோளிங்கர், திருக்கழுக்குன்றம், திருச்சி, திருச்செங்கோடு ஆகிய இடங்களில் பொதுமக்கள் வசதிக்காக ரோப் கார் வசதி விரைவில் ஏற்படுத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.