திருச்சி கிராமாலயா மற்றும் கிவ்2ஏசியா தொண்டு நிறுவனம் இணைந்து கொரோனா தடுப்பு மருந்து உபகரணங்கள், பாதுகாப்பு சாதனங்கள் மற்றும் சுகாதார பொருட்களை அரசு மருத்துவமனை மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வழங்கினர்.அந்த நிகழ்ச்சி திருச்சி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இதில் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு பொருட்களை சுகாதார துறை அதிகாரிகளிடம் வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுத விண்ணபித்துள்ள தனி தேர்வர்களை கவனத்தில் கொண்டுள்ளோம் அவர்களுக்கு மதிப்பெண் வழங்குவதா அல்லது அவர்களுக்கு தேர்வு நடத்துவதா என்பது குறித்து முதலமைச்சரிடம் ஆலோசனை செய்து விரைவில் நல்ல முடிவு அறிவிக்கப்படும்.பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது தொடர்பாக பல்வேறு ஆலோசனைகள் வருகின்றன அந்த ஆலோசனைகளை அடிப்படையிலும் சி.பி.எஸ்.சி எவ்வாறு மதிப்பெண் வழங்க உள்ளார்கள் என்பதையும் ஆராய்ந்து கலந்தாலோசித்து அனைத்து தரப்பு மாணவர்களையும் திருப்திப்படுத்தும் வகையில் மதிப்பெண் வழங்கப்படும்.தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிப்பதாக பல்வேறு புகார்கள் வருகின்றன.எந்த பள்ளிகளின் மீது புகார்கள் வருகிறதோ அவர்களை கண்டித்து வருகிறோம்.அதையும் மீறி அதிக கட்டணம் வசூலித்தால் அந்த பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்துள்ளது.அடுத்தடுத்து அறிவிக்கப்படும் தளர்வுகளை வைத்து பள்ளிகள் திறப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.கடந்த ஆட்சியில் வழங்கப்பட வேண்டிய 2 லட்சம் லேப்டாப்புகள் இன்னும் மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ளது.எனவே அந்த மாணவர்களுக்கும் சேர்த்து புதிதாதக தேர்தல் அறிக்கையில் அறிவித்தப்படி டெப்லெட்டுக்கள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.கல்வி பெறும் உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் மீது கடந்த ஆட்சியில் பாகுபாடு காட்டப்பட்டு வந்தது.இனி அவ்வாறு அந்த மாணவர்களிடம் பாகுபாடு காட்டக்கூடாது அந்த மாணவர்களுக்கான கல்வி கட்டணத்தில் நிலுவைத்தொகை இருந்தால் அதை உடனடியாக விடுவிக்க வேண்டும் எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.இந்த நிகழ்ச்சியில் திருச்சி கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ்,மணப்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்துல் சமது மற்றும் மருத்துவ துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.