தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று அறிவித்தது. இதனையடுத்து தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று முதல் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று மாலை முதல் திருச்சியில் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது. இதனால் திருச்சியில் உள்ள ஏரி குளங்களில் மழைநீர் நிரம்பிய உள்ளது. மேலும் கனமழை காரணமாக பிரதான சாலைகள் மற்றும் சுரங்க பாலங்களில் மழைநீர் குளம்போல் தேங்கியுள்ளது.
இந்நிலையில் திருச்சி பாலக்கரை சங்கிலியாண்டபுரம், காஜா பேட்டை பகுதிகளுக்கு உட்பட்ட 33-வது 26-வது வார்டுகளில் உள்ள தெருக்களில் மற்றும் வீடுகளில் மழைநீர் புகுந்து காணப்பட்டது.
இதுகுறித்து அப்பகுதி பொதுமக்கள் நேற்று இரவு பாதுகாப்பு நடவடிக்கை எடுக்க கோரி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். ஆனால் மாநகராட்சி அதிகாரிகள் யாரும் கண்டு கொள்ளவில்லை.
இந்நிலையில் மாநகராட்சி அதிகாரிகளை கண்டித்து சங்கிலியாண்டபுரம், பாத்திமா நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கொட்டும் மழையில் குடையுடன் அரசமரம் பஸ்ஸ்டாண்ட் பகுதியில் பஸ் மற்றும் வாகனங்களை மறித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த வந்த பாலக்கரை காவல் நிலைய ஆய்வாளர் தங்கவேல் மற்றும் போலீசார் பொதுமக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். அப்போது மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள் மாநகராட்சி மழைநீரை வெளியேற்றினால் மட்டுமே மறியல் போராட்டம் கைவிடப்படும் என தெரிவித்தனர்.
அதனைத் தொடர்ந்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் அப்பகுதியை சேர்ந்த திமுக நிர்வாகிகள் அலெக்ஸ்ராஜா முகேஷ் மற்றும் திமுக நிர்வாகிகள் பொது மக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதின் காரணமாக மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டனர்.
மேலும் மாநகராட்சி அதிகாரிகளான இளநிலை பொறியாளர் சீனிவாசன். மாநகராட்சி சுகாதார அலுவர் கார்த்திகேயன் ஆகியோர் வந்து பாதிக்கப்பட்ட இடங்களை நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க மாநகராட்சி ஊழியர்களுக்கு அதிகாரிகள் உத்தரவிட்டனர்.
பாத்திமா நகர் பகுதிகளில் உள்ள தெருக்களில் தேங்கியிருந்த மழை நீர் மற்றும் குடிதண்ணீர் தொட்டியில் தேங்கியிருந்த தண்ணீரில், வீடுகளை சூழ்ந்த தண்ணீரை மினி மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர்.