நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மின் ஊழியர்கள் விவசாயிகள் மற்றும் மாநில அரசுகளின் எதிர்ப்பை மீறி மின்சார சட்ட திருத்த மசோதாவை மத்திய அரசு தாக்கல் செய்ய உள்ளது. ஏற்கனவே மின்சார வாரியத்தில் துணை மின் நிலையங்களை தனியாருக்கு தாரை வார்ப்பது, அவுட்சோர்சிங் முறையில் பணியமர்த்துவது என மின்வாரியத்தை கூறு போட்டு தனியாருக்கு தாரை வார்க்கும் முடிவை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்கள் நடைபெற்ற நிலையில் இன்றைய தினம் நாடு தழுவிய அளவில் மின்வாரிய அலுவலகங்களில் வருகைப் பதிவேட்டில் கையெழுத்திட்டு பணி புறக்கணிப்பு செய்யும் போராட்டத்தில் மின்வாரிய கூட்டு நடவடிக்கை குழு எடுத்த முடிவின்படி மின்வாரிய ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
அதன்படி தென்னூர் தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய அனைத்து தொழிற்சங்கங்கள் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கேங்மேன், மின் ஊழியர்கள், அலுவலர்கள் மற்றும் பொறியாளர்கள் என 150-க்கும் மேற்பட்டோர் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மின்சார சட்ட திருத்த மசோதாவை திரும்பபெற வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கண்டன கோஷம் எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் மின்வாரிய அனைத்து தொழிற்சங்க கூட்டு நடவடிக்கை குழு பிரதிநிதிகள் தியாகராஜன், ராஜமாணிக்கம், விக்ரமன், நரசிம்மன்,சிவச்செல்வன், பெருமாள், அண்ணாதுரை, இளையராஜா மற்றும் அதிகாரிகள் ஊழியர்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்