விவசாய பொருட்களுக்கு லாபகரமான விலை தராத மோடி அரசை கண்டித்து தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் ரயில் மூலம் லக்னோவிற்கு சென்று போராட்டம் நடத்த உள்ளனர். அதற்காக இன்று காலை திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்திலிருந்து விவசாயிகள் ரயில் மூலம் புறப்பட்டு சென்றனர்.
முன்னதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவர் அய்யாக்கண்ணு நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் :-
நடந்து முடிந்த 2019 பாராளுமன்ற தேர்தலின் போது விவசாயிகளுக்கு 2 மடங்கு லாபகரமான விலையை தருகிறோம் எங்களுக்கு வாக்களியுங்கள் என்று சொன்னார். ஒரு கிலோ 18 ரூபாய் என்று பெற்ற நெல்லுக்கு 54 ரூபாய் தருகிறேன் என்று கூறினார். 2700 ரூபாய்க்கு விற்ற கரும்புக்கு 8100 ரூபாய் தருகிறேன் என கூறினார். 10000 ஆயிரம் கோடி கரும்பை வாங்கி ஏமாற்றிவிட்டார்கள்.
நெல்லுக்கு லஞ்சம் கேட்கிறார்கள். விவசாய நிலத்தில் வேலை செய்வதற்கு ஆட்கள் கிடைப்பதில்லை 100 நாள் வேலைத்திட்டத்திற்கு சென்று விடுகின்றனர். குறிப்பாக 100 நாள் வேலை திட்டம் என்பது கோடை காலத்தில் வேலை இல்லாதவர்களுக்காக கொண்டு வந்த திட்டம். இந்த திட்டத்தால் விவசாயிகள் நடவு செய்யும் காலத்திலும், அறுவடை செய்யும் காலத்திலும் போதிய ஆட்கள் வேலைக்கு கிடைப்பதில்லை. எனவே இதுபோன்ற காலங்களில் எங்களை காப்பாற்றும்படி கேட்டோம் மோடி அவர்கள் எங்களை காப்பாற்றவில்லை.
அதனால் மோடி அரசை கண்டித்து போராடுவதற்காக திருச்சியில் இருந்து ரயில் மூலம் லக்னோவிற்கு விவசாயிகள் செல்கின்றோம். என தெரிவித்தார். அதனைத்தொடர்ந்து திருச்சி ரயில் நிலையத்தின் 3வது பிளாட்பாரத்தில் இருந்து திருச்சியில் இருந்து சென்னை செல்லும் ரயிலில் விவசாயிகள் புறப்பட்டுச் சென்றனர்.