திருச்சியில் தந்தை பெரியார் அரசு கலை அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் இளங்கலையில் 15 பாடபிரிவுகள் உள்ளது. திருச்சி மட்டுமல்லாது பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் இங்கு கல்வி பயின்று வருகிறார்கள். இந்த கல்லூரியில் சேர்வதற்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது. முதல் நாளான இன்று சிறப்பு பிரிவு மாணவர்கள் கலந்தாய்வு நடைபெற்றது. இதில் ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய கல்லூரி முதல்வர் சுகந்தி, கல்லூரியில் உள்ள 1,460 இடங்களுக்கு 19,760 மாணவர்களிடமிருந்து 54,000 விண்ணப்பங்கள் வந்துள்ளன. அவர்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கி உள்ளது. இந்த கல்வி ஆண்டில் 20 சதவீதம் கூடுதலான இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு வணிகவியல், வேதியியல், கணினி அறிவியல், வரலாறு, தமிழ் ஆகிய பாடங்களில் சேர மாணவர்கள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் கல்லூரியில் பயிலும் மாணவர்கள் ராக்கிங் செயலில் ஈடுபட்டால் உடனடியாக டிசி வழங்குவதுடன் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் மேலும் சிறை தண்டனையும் வழங்கப்படும் என்ற படிவத்தை மாணவர்களுக்கு இந்த ஆண்டு வழங்கியுள்ளோம். என தெரிவித்தார்.