தமிழகத்தில் உள்ள அம்மன் ஆலயங்களில் சிறப்பு வாய்ந்தது திருச்சி உறையூரில் உள்ள வெக்காளியம்மன் ஆலயம். மிகவும் பிரசித்தி பெற்ற இவ்வாலயத்தில் அம்மன் மக்களின் குறைதீர்ப்பதற்காக மேற்கூரையின்றி அருள்பாலித்து வருகிறார். இவ்வாலயத்தில் அம்மனுக்கு விளக்கேற்றி வழிபாடு செய்தால் திருமணத்தடை, மற்றும் புத்திர தோஷம் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இத்தனை சிறப்பு மிக்க இக்கோயிலில் 16 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது.
காலை நான்கு முப்பது மணி அளவில் யாகசாலை பூஜை துவக்கப்பட்டு யாகசாலையிலிருந்து சிவாச்சாரியார்கள் கடங்களில் புனித நீரை கொண்டு வந்து கலசங்கள் மேல் ஊற்றினர். பக்தர்கள் விண்ணை முட்டும் அளவில் ஓம்சக்தி, பராசக்தி என்று கோஷமிட்டனர்.
இந்த நிகழ்வில் தமிழக நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு, திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார், மாநகராட்சி ஆணையர் வைத்திநாதன்,திருச்சி மாநகராட்சி மேயர் அன்பழகன் மாவட்ட ஊராட்சித் தலைவர் இராஜேந்திரன், இந்து சமய அறநிலையத்துறை துணை ஆணையர் ஞானசேகரன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கும்பாபிஷேக விழாவையொட்டி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் தலைமையில் ஏராளமான காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.