தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி புத்தூர் பிஷப்ஷீபர் மேல்நிலைப்பள்ளியில் இன்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில தலைவர் சீதரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் சிராஜுதீன் வரவேற்றார். பொதுச் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி சிறப்புரை ஆற்றினார். கூட்டத்தில் கடந்த 1.1.2020 முதல் இன்றுவரை வழங்க வேண்டிய மூன்று தவணை 11 சதவிகித அகவிலைப்படியினை வழங்க வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின்கீழ் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஓய்வூதியர்களுக்கு செலவினத்தை முழுமையாக காப்பீட்டு நிறுவனம் வழங்கவில்லை. மாவட்ட அளவிலான கமிட்டி, மருத்துவ செலவு செய்த ஓய்வூதியர்களுக்கு செலவுப் பணத்தை வழங்க உத்தரவிட்டும் காப்பீட்டு நிறுவனம் திருப்பி விடுகின்ற போக்கைக் கண்டித்தும், செலவு செய்த முழுப் பணத்தையும் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தியும் கூட்டமைப்பின் சார்பில்வரும் செப்டம்பர் 8-ந் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் துணை தலைவர்கள் சந்திரன், இளமாறன், சுகுமாரன், சுப்பிரமணியன், குப்பன், ராமமூர்த்தி உள்பட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கூட்டத்திற்கான ஏற்பாடுகளை திருச்சி மாவட்ட தலைவர் செந்தமிழ்ச்செல்வன், மாவட்ட செயலாளர் மதிவாணன், துணைத்தலைவர் குருநாதன் உள்பட மாவட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர். முடிவில் மாநில பொருளாளர் ஜெயச்சந்திரன் நன்றி கூறினார்.

முன்னதாக பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனாவை காரணம் காட்டி மத்திய அரசு 1.1.2020, 1.7.2020 மற்றும் 1.0.2021 ஆகிய மூன்று தவணை 11சதவிகித அகவிலைப் படியினை நிறுத்தி வைத்தது.தற்போது மூன்று தவணை 11 சதவிகித அகவிலைப்படியினை 1.7.2021 முதல் வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து பல மாநிலங்களும் 11 சதவிகித அகவிலைப்படியினை வழங்க உத்தர விட்டுள்ளன. தமிழகத்தில் காலஞ்சென்ற தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர், மத்திய அரசு வழங்கியபோதெல்லாம் மாநில அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கப்படும் எனக் கூறி தொடர்ந்து முப்பது ஆண்டு காலத்திற்கு மேலாக அகவிலைப்படியை மாநில அரசு ஊழியர்கள் பெற்று வந்தார்கள்.

தற்போது ஆட்சிப் பொறுப்பை ஏற்று இருக்கும் திமுக அரசின் நிதியமைச்சர், சட்டப் பேரவையில் அகவிலைப்படி உயர்வு என்பது சமூகநீதி மற்றும் பொருளாதார நிலைமைக்கு ஏற்பதான் வழங்கப்படும். அதுவும் 1.4.2022 முதல் தான் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளார். இது அரசு ஊழியர், ஆசிரியர் மற்றும் ஓய்வூதியர் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்