திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாலை மாமன்ற உறுப்பினர்களின் அவசர கூட்டம் மாநகராட்சி மேயர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான் மாநகராட்சி துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட மாநகராட்சி மாமன்ற உறுப்பினர்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைகள் பற்றி எடுத்துரைத்தனர். அப்போது 47வது வார்டு அமமுக மாமன்ற உறுப்பினர் செந்தில்நாதன் சொத்து வரி உயர்வை சுட்டிக்காட்டி வெளிநடப்பு செய்தார்.
அதனைத் தொடர்ந்து கருப்பு சட்டை அணிந்தும் கருப்பு பேட்ஜ் அணிந்து வந்திருந்த 14வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் அரவிந்தன் தலைமையில் 37 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் அனுசுயா 65 வது வார்டு அதிமுக மாமன்ற உறுப்பினர் அம்பிகாபதி ஆகியோர் சொத்து வரி உயர்வை கண்டித்து திடீரென கூட்ட அரங்கில் கண்டன கோஷம் எழுப்ப முற்பட்டனர். அப்போது கூட்ட அரங்கில் இருந்த திமுக மாமன்ற உறுப்பினர்கள் அதிமுக மாமன்ற உறுப்பினர்களிடம் கோஷம் எழுப்பக்கூடாது என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதனைக் கண்ட மாநகராட்சி மேயர் அன்பழகன் இருதரப்பினரையும் சமாதானம் செய்து கூட்ட அரங்கில் கோஷம் எழுப்பக்கூடாது என்று அதிமுக மாமன்ற உறுப்பினர்களிடம் கூறினார்.
அதனைத் தொடர்ந்து அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் சொத்து வரி உயர்வை கண்டித்து தாங்கள் வெளிநடப்பு செய்ததாக கூறி கூட்ட அரங்கில் இருந்து வெளியேறினர். இதனால் மாநகராட்சி அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.