ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து வஸ்திர மரியாதை இன்று காலை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு வந்தது.ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஆண்டாள், பெருமாள் மீதிருந்த பக்தியால் அவருக்கு பூ மாலை தொடுக்கும், தொண்டு செய்து அவருக்கு மனைவியானாள். ஆண்டாள் மணமுடித்து ஐக்கியமானது ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் என்பதால் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவிலுக்கும், ஸ்ரீரங்கம் கோவிலுக்குமிடையே சம்பந்தமும், உறவும் மங்கள பொருட்கள் பரிவர்த்தனையும் நெடுங்காலம் இருந்து வந்தது. எனினும் பல காரணங்களால் அவ்வழக்கம் இடையில் நின்று போனது. பின்னர் இரு ஊர் பக்தர்களின் முயற்சியால் கடந்த சில ஆண்டுகளாக ஸ்ரீரங்கம் சித்திரை தேருக்கு முதல் நாள் ஸ்ரீவில்லிப்புத்தூரில் இருந்தும், ஸ்ரீவில்லிப்புத்தூர் தேரோட்டத்திற்கு முதல் நாள் ஸ்ரீரங்கத்தில் இருந்தும் மங்களப்பொருட்கள் பரிவர்த்தனை நடத்து வருகிறது.

 

இந்நிலையில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் நாளை நடக்கவுள்ளதை முன்னிட்டு இன்று காலை 9.30 மணியளவில் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவிலில் இருந்து எடுத்து வரப்பட்ட பட்டு வஸ்திரங்கள், மலர்கள் மற்றும் இலைகளால் செய்யப்பட்ட கிளிகள், பழங்கள் உள்ளிட்ட மங்கள பொருட்கள் கருட மண்டபத்தில் பக்தர்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன. பின்னர் அவை மேளதாளத்துடன் யானை மீது வைத்து ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது.

பின்னர் ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில் தக்கார் ரவிச்சந்திரன், நிர்வாக அதிகாரி முத்துராஜா, ஸ்தானிகம் ரமேஷ்பட்டர், சுதர்சன் பட்டர் உள்ளிட்ட குழுவினர் வஸ்திரமரியாதையை ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் இணைஆணையர் மாரிமுத்து, திருச்சி மண்டல இணை ஆணையர் செல்வராஜ், உதவி ஆணையர் கந்தசாமி, மற்றும் கோவில் அர்ச்சகர்கள், நிர்வாகிகளிடம் சமர்ப்பித்தனர். நாளை சித்திரை தேரோட்டத்தின் போது தேரில் எழுந்தருளும் நம்பெருமாள் ஸ்ரீவில்லிப்புத்தூர் வஸ்திரங்களை அணிந்து தேரோட்டம் கண்டருளுகிறார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *