திருச்சி மாவட்ட ஒருங்கிணைந்த அச்சக சங்கத்தின் தலைவர் ஹரிகிருஷ்ணன் தலைமையில் அந்த அமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் பழனிக்குமாரிடம் மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது;- எங்களின் அச்சுத் தொழிலுக்கு ஆதாரமாக உள்ள காகிதம் தினம் தினம் விலை ஏறிக் கொண்டிருக்கிறது. இதனால் எங்களுடைய தொழில் மிகவும் நலிவடைந்து வருகிறது. ஆகவே காகித ஆலைகள் இடம் பேச்சுவார்த்தை நடத்தி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதேபோன்று அச்சுத் தொழிலின் மூலப்பொருளாக விளங்கும் மை, கெமிக்கல், பாலி மாஸ்டர் போன்றவைகளின் விலையும் உயர்ந்துள்ளது. ஏற்கனவே அச்சுத் தொழிலுக்கு விதிக்கப்பட்ட 5 சதவீத ஜி.எஸ்.டி. பின்னர் 12 சதவீதமாகவும், கடந்த அக்டோபர் முதல் 18 சதவீதமாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
எனவே ஏற்கனவே நடைமுறையில் இருந்த படி 5 சதவீத ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்த மத்திய அரசுக்கு ஆவண செய்ய வேண்டும். அச்சுத் தொழிலுக்கு தனி நல வாரியம் அமைத்திட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனு அளித்த போது சங்கத்தின் செயலாளர் மோகன், பொருளாளர் அப்பாஸ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்.