கோடை விடுமுறைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் இன்று பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கல்வி நிறுவனங்கள் சரிவர இயங்கவில்லை.
இந்நிலையில் கொரோனா நோய்த்தொற்று குறைய தொடங்கியதால் கடந்த பிப்ரவரி 1 முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் தொடர்ந்து நடத்தப்பட்டு வந்தது. மே மாதம் 10, 11,12ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட்டது. அதேபோல் 1 முதல் 9ஆம் வகுப்பு மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு நடத்தப்பட்டு கடந்த மாதம் 13ஆம் தேதி முதல் கோடை விடுமுறை விடப்பட்டது.
இந்நிலையில் ஒருமாத கால கோடை விடுமுறைக்கு பிறகு இன்று முதல் மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. பள்ளிகள் மீண்டும் திறக்கப்படுவதால் தூய்மைப்படுத்தி, கிருமி நாசினி தெளித்து மாணவர்களை வரவேற்க தயார் நிலையில் வகுப்பறைகள் உள்ளன. பள்ளிகள் திறக்கப்பட்டதும் முதல் ஐந்து நாட்கள் மாணவ மாணவிகளுக்கு நல்லொழுக்க வகுப்புகள் நடத்தப்பட உள்ளன.
அதன் ஒரு பகுதியாக திருச்சி சேவா சங்கம் பெண்கள் பள்ளியில் மாணவிகள் மீண்டும் இன்று பள்ளிக்கு வந்தனர் அவர்களுக்கு ஆசிரியர்கள் கிருமிநாசினி கைகளை சுத்தப்படுத்தி உள்ளே அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு இனிப்புகள் பூ வழங்கி வரவேற்றனர். தொடர்ந்து மாணவிகள் வகுப்பறையில் பாட புத்தகங்களை ஏந்தி படிக்கத் தொடங்கினர்.