தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க திருச்சி மாவட்ட 5-வது மாநாடு திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகில் உள்ள அருண் ஓட்டலில் இன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாவட்ட தலைவர் தமிழ்செல்வி தலைமை வகித்தார். அஞ்சலி தீர்மானத்தை மாவட்ட துணைத்தலைவர் மல்லிகாபேகம் வாசித்தார். மாநில பொருளாளர் தேவமணி துவக்கவுரையாற்றினார்.
வேலை அறிக்கையை மாவட்ட செயலாளர் சித்ரா வாசித்தார். வரவு – செலவு அறிக்கையை மாவட்ட பொருளாளர் ராணி சமர்ப்பித்தார். தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் சங்க திருச்சி மண்டல தலைவர் சீனிவாசன் வாழ்த்துரை வழங்கினர். மாநாட்டில் அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர்களுக்கு முறையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஓய்வூதியம் மற்றும் குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி திட்டத்தில் பணிநிறைவு செய்து ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு ரூ10லட்சம், உதவியாளர்களுக்கு ரூ5லட்சம் வழங்க வேண்டும். குறு மைய அங்கன்வாடி ஊழியர்களுக்கு முதன்மை மைய ஊழியர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும். 10 வருடம் பணிமுடித்த தகுதி வாய்ந்த உதவியாளர்களை பணியாளர்களாக பதவி உயர்வு வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்க மாநில தலைவர் ரெத்னமாலா சிறப்புரையாற்றினார். மாநில பொதுச்செயலாளர் டெய்சி நிறைவுரையாற்றினார். முன்னதாக மாநில செயற்குழு உறுப்பினர் கலைசெல்வி வரவேற்றார். முடிவில் மாவட்ட இணைசெயலாளர் சித்ரா நன்றி கூறினார்.