சமூக நீதிப் பேரவை ஒருங்கிணைப்பாளர் ரவிக்குமார் தலைமையில் அரியாவூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் இன்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-
திருச்சி மாவட்ட ஸ்ரீரங்கம் தொகுதி, மணிகண்டம் ஊராட்சி ஒன்றிய, வடக்கு அரியாவூர் ஊராட்சிக்கு உட்பட்ட அல் அமீன் நகர், குலாம் அலிகான் நகர் ஆகிய பகுதிகளில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்தப் பகுதி திருச்சி சோமரசம்பேட்டை வழியாக தோகை மலை செல்லும் சாலையில் அரியாவூர் ஒத்தக்கடை பேருந்து நிறுத்தத்திற்கு அடுத்ததாக அமைந்துள்ளது இந்த பேருந்து நிறுத்தத்தில் இருந்து அல் அமீன் நகர் செல்லும் வழியில் அரசு மதுபான கடை (கடை எண் 10406) அமைந்துள்ளதால் இங்கு வரும் குடிமகன்கள் மது பாட்டில்களை வாங்கி மதுபான கடையை சுற்றியுள்ள பகுதிகளில் அமர்ந்து மது குடித்துவிட்டு அந்த வழியாக நடந்து செல்லும் பெண்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களை தகாத வார்த்தைகளில் பேசி கிண்டல் செய்து வருகின்றனர். இது குறித்து பலமுறை டாஸ்மாக் நிர்வாகத்திடமும், காவல் நிலையத்திலும் புகார் அளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் தற்போது வரை எடுக்கப்படவில்லை.
குறிப்பாக இரவு நேரங்களில் டாஸ்மாக் கடையில் மது வாங்கிவிட்டு அந்தப் பகுதிகளில் உள்ள வீட்டு வாசல்களிலும் ,குடி தண்ணீர் பிடிக்கும் குழாய் அருகிலும் குடிமகன்கள் அமர்ந்து மது குடித்துவிட்டு அந்த பாட்டில்களை அங்கேயே வீசிவிட்டும், உடைத்து விட்டும் செல்கின்றனர். இதனால் மாலை நேரங்களில் குடிதண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் பெரும் அச்சத்திலும் சிரமத்திலும் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் அல் அமீன் நகர் பகுதியில் பேருந்து நிறுத்தம் இல்லாத காரணத்தால் அரியாவூர் ஒத்தக்கடை பஸ் நிறுத்தத்தில் இறங்கி அங்கிருந்து நடந்து செல்வதாலும் குடிமகன்களால் பிரச்சனை அதிகமாக எழுகிறது. திருச்சி மாவட்ட கலெக்டர் அவர்கள் உடனடியாக டாஸ்மாக் கடையை அகற்றுமாறு கோரிக்கை மனு அளித்தனர்.