மின் கட்டண உயர்வை கண்டித்து திருச்சி மாநகர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு மாநகர் மாவட்ட தலைவர் ராஜசேகரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜா சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு பேசினார் அப்போது அவர் கூறியதாவது;-
டாஸ்மாக் மூலம் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ 38 ஆயிரம் கோடி வருமானம் கிடைக்கிறது. இதில் தான் இந்த அரசாங்கமே நடந்து கொண்டிருக்கிறது. தமிழகத்தின் நிதி நிலைமை மிகவும் மோசமாக இருக்கிறது. தற்போது தமிழக அரசு ரூ. 27 முதல் ரூ. 570 வரை மின் கட்டணத்தை உயர்த்தி உள்ளது. விரைவில் விவசாயிகளுக்கு வழங்கி வரும் இலவச மின் திட்டத்தை நிறுத்தப் போகிறார்கள்.
இபிஎஸ் ஓபிஎஸ் ஆட்சியில் தமிழகத்தில் யுபிஎஸ் தேவையில்லாமல் இருந்தது. இப்போது யுபிஎஸ் க்கு தேவை வந்துவிட்டது. வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன் மூலம் தமிழகத்தில் இருக்கும் ஒரு கோடி போலி வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். தமிழகத்தில் 18 வயதுக்கு எண்ணிக்கை 5.20 கோடி என புள்ளி விவரங்கள் கூறுகிறது. ஆனால் வாக்காளர்களின் எண்ணிக்கை 6.30 கோடியாக இருக்கிறது. முன்னாள் முதல்வர் கருணாநிதி எல்லோரிடமும் ஆலோசனை கேட்டு முடிவை அவர் எடுத்தார். மு க ஸ்டாலின் ஆட்சியின் முடிவு இன்னொரு தரப்பினரின் கைக்கு சென்று இருக்கிறது.
தமிழக முதலமைச்சர் மு. க ஸ்டாலினுக்கு வீட்டில் நடப்பதும் தெரியாது நாட்டில் நடப்பதும் தெரிவதில்லை. தமிழகத்தில் மதுரையில் அதிகம் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. அதற்குக் காரணம் அங்கு இருந்த போலீஸ் கமிஷனர் தேவ ஆசீர்வாதம் ஆகும். மேலும் கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவி இறந்த விவகாரத்தில் பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டி அளித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசுகையில் “ஒரே ஒரு குழந்தை இறந்துச்சு” அதற்கு அந்த பள்ளியில் உள்ள 3500 மாணவ, மாணவிகளின் சான்றிதழை கலவரத்தில் எரித்துள்ளனர் என்று அமைச்சரின் அலட்சிய பேச்சு அவரின் பொறுப்பற்ற செயலை காண்பிக்கிறது. என்று கூறினார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பொதுச்செயலாளர்கள் ஒண்டிமுத்து, காளீஸ்வரன், பொன் தண்டபாணி, மாவட்ட துணைத் தலைவர் கள்ளிக்குடி ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் சந்து கடை சதீஷ்குமார், விவசாய அணி மாவட்ட தலைவர் பங்களா சக்திவேல், முத்தையன், ஊடகப்பிரிவு மாவட்ட தலைவர் இந்திரன், மகளிர் அணி ரேகா, புவனேஸ்வரி, மலர்க்கொடி உள்பட நூற்றுக்கணக்கானவர்கள் கலந்துகொண்டனர்.