காவிரித் தாய்க்கும் இயற்கை அன்னைக்கும் நன்றி சொல்லும் விதமாக இந்த ஆடிப்பெருக்கு கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் புதுமண தம்பதிகள் தங்களது திருமண நாளில் அணிந்த மாலைகளை காவிரி ஆற்றில் விட்டுவிட்டு புத்தாடை உடுத்தி புதிய மஞ்சள் கயிறு அணிவது வழக்கம்.
கடந்த இரண்டு வருடமாக கொரோனா தொற்று காவிரி படித்துறைகளில் பொதுமக்கள் அனுமதிக்கவில்லை. ஆனால் இந்த வருடம் தொற்று பாதிப்பு குறைவு காரணமாக பொதுமக்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதன் காரணமாக காலை முதலே பொதுமக்களும்,புதுமண தம்பதிகளும் காவிரி ஆற்றங்கரைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.இதன் ஒரு பகுதியாக திருச்சி அம்மா மண்டபம் படித்துறையில் ஏராளமான பொதுமக்கள் மற்றும் புதுமண தம்பதிகள் காவிரி ஆற்றில் குளித்து காவிரி தாயை வணங்கி ஆடிப்பெருக்கு விழாவை குடும்பத்தினருடன் கொண்டாடினர்.
ஆடிப்பெருக்கு விழாவை முன்னிட்டு 650-க்கும் மேற்பட்ட காவல் துறையினர், மற்றும் தீயணைப்பு துறையினர் பிளாஸ்டிக் படகுகளில் உதவியுடன் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.