தமிழகத்தில் மிகச்சிறந்த ஆன்மிக சுற்றுலா தலமாக வேளாங்கண்ணி மாதா கோவில் பேராலயம் விளங்குகிறது. இந்த பேராலயத்துக்கு தினமும் வெளிநாடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தா்கள் வந்து செல்கின்றனர். இந்நிலையில் ஒவ்வோரு ஆண்டும் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா ஆகஸ்டு மாதம் 29ம்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வேளாங்கண்ணி அன்னை ஆலயத் திருவிழா இந்த ஆண்டு கோலாகலமாக நடைபெற உள்ளது.
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய ஆண்டு திருவிழா வருகிற 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடைபெறுகின்றது. இந்நிலையில் இந்த திருவிழாவிற்காக பல்வேறு நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்கள், ஊர்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை புரிவதால் நாகப்பட்டினம் முழுவதும் பலத்த பாதுகாப்பு மேற்கொள்ளப் பட்டுள்ளது. நாகப்பட்டினம் மற்றும் வெளி மாவட்டங்களை சேர்ந்த தாலுக்கா, ஆயுதப்படை மற்றும் சிறப்பு காவல் படையை சேர்ந்த சுமார் 1,800 காவலர்களும், 200 ஊர்காவல் படையினரும் ஈடுபடுத்தப்பட உள்ளனர். மேலும் 27 உயர் கண்காணிப்பு கோபுரம், 04 ஆளில்லா விமானம் ( Drone Camera வும், 760 கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்தப்பட்டு கண்காணிப்பு பணி தீவிரப் படுத்தப் பட்டுள்ளது. மேலும் பல்வேறு முன் ஏற்பாடுகளையும், பாதுகாப்பு பணிகளையும் நாகை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகின்றது. இந்நிலையில் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய மாதா பேராலய திருவிழாவிற்கு வரும் பக்தர்களுக்கு ஏதுவாக வேளாங்கண்ணி ஆர்ச் அருகில் ஒரு பஸ் நிறுத்தமும், மேரிஸ்கார்னர் பகுதியில் ஒரு தற்காலிக பஸ் நிறுத்தமும் அமைக்கப்பட உள்ளது. 750 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று போக்குவரத்துத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்துள்ளார்.