திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் மோகன் தலைமையில் மாணவர்கள் மாவட்ட கலெக்டர் பிரதீப் குமாரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது;-
திருச்சி செல்லம்மாள் மேல்நிலைப்பள்ளியில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகிறார்கள். இந்தப் பள்ளி மாணவர்களிடம் லட்சம் கணக்கில் பணம் வாங்கி கொண்டு மாணவர்களை பள்ளிக்கு அழைத்து வருவதற்காக பயன்படும் பேருந்து மிகவும் மோசமானதாக பழுதடைந்த நிலையில் அதிக சத்தத்துடன் சாலையில் சென்றதைக் கண்டு அந்த பேருந்தின் என்னை ( TN 45 AC 9299 ) வைத்து ஆய்வு செய்தபோது அந்த பேருந்தின் ஆர்சி இன்சுரன்ஸ் பர்மிட் போன்ற அனைத்தும் 2020 ஆம் ஆண்டு முடிவடைந்தது தெரியவந்தது.
இது போன்ற பாதுகாப்பற்ற பேருந்தில் 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயணித்து வருகின்றனர். உடனடியாக மாவட்ட நிர்வாகம் பள்ளி நிர்வாகத்தின் மீது உடனடி நடவடிக்கை எடுத்து பள்ளி உரிமையாளரை கைது செய்ய வேண்டும் மேலும் தனியார் பள்ளிகளையும் பேருந்துகளை ஆய்வு செய்ய வேண்டும் என அந்த புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.