அகில இந்திய மக்கள் நலக் கழகத்தின் மாநில இணை செயலாளர் செல்லப்பன் தலைமையில் எல்பின் நிறுவனத்தால் பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள் திருச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் பிரதீப் குமாரிடம் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அகில இந்திய மக்கள் நலக் கழகத்தில் உள்ள உறுப்பினர்கள் தமிழ்நாடு முழுவதும் உள்ள மக்களுக்கு பல்வேறு சமூகப் பணிகளை ஆற்றி வருகின்றனர். இந்நிலையில் 600 க்கு மேற்பட்ட உறுப்பினர்கள் எல்பின் மற்றும் ஸ்பேரோ குளோபல் ட்ரேடர் எஸ்டேட் நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர் குறிப்பாக 150 க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு பெற்ற மத்திய மாநில அரசு ஊழியர்களும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் தற்போது பணியில் உள்ள மத்திய மாநில அரசு ஊழியர்கள்.
எல்பின் நிறுவனத்தின் நிறுவனர்களான ராஜா என்கிற அழகர்சாமி அவரது சகோதரர் ரமேஷ் குமார் ஆகிய இருவரும் எங்களிடமிருந்து கோடிக்கணக்கில் பணத்தைப் கொடுத்து முதலீடு செய்துள்ளனர். மேலும் முதலீடு செய்த மக்களுக்கு ஒரு வருடத்தில் மூன்று மடங்கு லாபம் கொடுப்பதாக வாக்குறுதி கொடுத்திருந்தார்கள் ஆனால் இரண்டு வருடங்களுக்கு மேலாகியும் முதலீடு செய்த மக்களுக்கு எந்த தொகையும் தராத பட்சத்தில் எல்பின் நிறுவனர் மீது குற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
முதலீட்டை இழந்த இந்த அமைப்பில் உள்ள மக்கள் அனைவரும் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவுக்கு புகார் அளித்தனர் சுமார் ஆறு மாத காலத்திற்கு மேலாகியும் புகார் அளித்த மக்களுக்கு எந்த ஒரு நிவாரணமும் கிடைக்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்க ஆவணம் செய்ய கேட்டு மனு அளித்தனர் .