மதுரை என்டர்டைன்மென்ட் சார்பில் ஆண்டுதோறும் திருச்சியில் வீட்டு உபயோக பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டு பொழுதுபோக்கு வீட்டு உபயோக பொருட்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்கு திருச்சி வெஸ்ட்ரி பள்ளி மைதானத்தில் தொடங்கியது. இதில் திருச்சி மாநகராட்சி மேயர் மு. அன்பழகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி பொருட்காட்சியை தொடங்கி வைத்தார்.
இதில் மாநகராட்சி கோட்டத் தலைவர் விஜயலட்சுமி கண்ணன், தி.மு.க. பகுதி செயலாளர் மோகன்தாஸ், திருச்சி தஞ்சை திருமண்டல பொருளாளர் எஸ். ராஜேந்திரன், செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி பள்ளி தாளாளர் கே. ரோசலின் ட், தலைமையாசிரியர் சைமன் சுகுமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் பிரம்மாண்டமான ஆழ்கடல் மீன்களின் குகை கண்காட்சி இடம்பெற்றுள்ளது.
மேற்கண்ட தணல் அக்கோரியம் சிங்கப்பூர் மற்றும் துபாய் நாடுகளில் உள்ளது போன்று 200 அடி நீளத்துக்கு மக்கள் மனதை ஆட்கொள்ளும் வகையில் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைப் பார்த்து பெண்கள் மற்றும் குழந்தைகள் குதூகுலம் அடைந்தனர். அது மட்டுமில்லாமல் திருச்சியில் இதுவரை கண்டிராத வகையிலான புதுப்புது ராட்டினங்கள் இடம்பெற்றுள்ளன.மேலும் பொழுது போக்கு பூங்காக்களும் உள்ளன.
திருச்சி மலைக்கோட்டை வாசிகள் ஒரு ஷாப்பிங் திருவிழாவை நடத்தும் அளவுக்கு நுகர்வோர் ஸ்டால்கள் வரிசையாக இடம் பிடித்துள்ளன. அவற்றில் முக்கியமாக பெண்களுக்கு தேவையான அனைத்து விதமான வளையல்கள், பேக்குகள், குடைகள் உள்ளிட்ட பேன்சி பொருட்களின் ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்லாமல் ஊட்டி மிளகாய் பஜ்ஜி, டெல்லி அப்பளம், ஊட்டி அப்பளம், பானிபூரி தரமான முறையில் மக்களுக்கு சாப்பிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்த வீட்டு உபயோக பொருட்காட்சி தினமும் மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை நடைபெறும் என மதுரை என்டர்டெயின்மென்ட் நிர்வாகிகள் பி. ராஜபாண்டி பி.சிட்டிபாபு எஸ். பாண்டியராஜன் ஆகியோர் தெரிவித்தனர்.