திருச்சி மாவட்டம் திருவரம்பூர் அருகே உள்ள பொன்மலை புனித சூசையப்பர் பவளவிழா அரங்கில் கிறிஸ்மஸ் விழா நடைபெற்றது. திருச்சி தெற்கு மாவட்ட கழக செயலாளர் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கிறிஸ்துமஸ் நற்செய்தியை வழங்கினார் .
அப்போது அவர் பேசுகையில் –
இயேசு கிறிஸ்து பெருமானை பல சிந்தனையாளர்கள் புரட்சியாளர் என்றுதான் அழைக்கிறார்கள். மிகவும் பிற்போக்கு சிந்தனைகள் நிரம்பியிருந்த அந்த சூழலில் ஏழைகளுக்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும் குரல் கொடுத்தவர் இயேசு பெருமான்.
சமூக நலம்:
சுமார் 2000-ம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் அவதரித்த இயேசு, மனித குலத்தின் மீது அளப்பரிய அன்பு கொண்டவராக இருந்தார்.”ஒரு கன்னத்தில் யாரேனும் அறைந்தால் மறு கன்னத்தையும் திருப்பிக்காட்டு” என்று சொன்னவருக்குக் கோபம் வந்திருக்குமா?! வந்துள்ளது! இயேசு பலமுறை கோபப்பட்டிருக்கிறார். ஆனால் ஒருமுறைகூடத் தன்னலத்துக்காக அவர் கோபப்படவில்லை. சமூக நலத்துக்காகவும், ஏழைகளின் மேம்பாட்டிற்காகவும் இயேசு கோபபட்டிருக்கிறார்.
ஏழை பங்காளன்:
எருசேலம் ஆலயத்தின் காணிக்கைப் பெட்டியில் எல்லோரும் காசுகள் போட்டபோது, ஒரு ஏழை விதவை இரண்டு காசுகள் மட்டுமே போட்டாள். அதைப் பார்த்து இயேசு பெருமான் ”மற்ற எல்லோரையும் விட இவளே அதிகமாகப் போட்டாள்! ஏனென்றால் மற்றவர்களெல்லாம் தங்களிடம் உள்ளதில் இருந்து கொஞ்சமாகப் போட்டார்கள்! ஆனால் இவளோ, தன்னிடத்தில் இருந்ததை எல்லாம் போட்டாள்” என்று குறிப்பிட்டு அந்த ஏழை விதவை பெண்ணை பெருமைப்படுத்தியவர்.”உன்மீது நீ அன்பு கூர்வது போல உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக” என்று சொன்னார் இயேசு பெருமான்!
இயேசு கல்வி சிந்தனைகள்:
ஒரு கல்வி அமைச்சராக இயேசு கிறுஸ்துவின் கல்வி சிந்தனைகள் என்னை கவர்ந்தவை!ஒரு மாணவனுக்கு சரியான நேரத்தில் சரியான செயலை கற்றுக்கொடுக்கும் இடம் பள்ளிக்கூடம். நன்னடத்தை, நேரம் தவறாமை, நேர்மை, மனவலிமை, துணிச்சல் ஆகிய நற்பண்புகளை கற்றுக்கொடுக்கும் இடமாக பள்ளிக்கூடம் திகழ்கிறது’ என்று இயேசுநாதர் தனது சீடர்களிடத்தில் கற்றலின் நன்மைகளை பற்றி எடுத்துரைத்துள்ளார்.
சிறுபான்மையினர் நலம்:
1989-ஆம் ஆண்டு சிறுபான்மையினர் நல ஆணையத்தை அமைத்தவர் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்!அவர் வழியில் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆட்சியில் – கரூர், மதுரை, தேனி ஆகிய மூன்று மாவட்டங்களில் ஒரு கிறிஸ்தவ உதவி சங்கம் கூடுதலாக துவங்கிட நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.ஜெருசலேமுக்கு புனித பயணம் செல்வதற்கு அருட் சகோதரிகள், கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.தொடர்ந்து சிறுபான்மையினர் மக்களின் நலன் காக்கும் அரசாக கழக அரசு திகழ்ந்து வருகின்றது. இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடைபெற்ற நல்லெண்ண விழாவில் ‘இது ஒரு மதத்தினரின் விழா அல்ல! சமுதாய விழா!’ என்று குறிப்பிட்டார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.அவர் சொன்னது போல தமிழ்நாட்டில் நாம் அனைவரும் இணைந்து அனைத்து விழாக்களையும் கொண்டாடி வருகிறோம். இந்த கிறிஸ்துமஸ் நன்னாளில் சகோதரத்துவம் பெருகட்டும். அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் தின வாழ்த்துகள் என பேசினார்.