கொரோனா நோய் தொற்று பரவல் தடுப்பு பணிகளுக்காக பிளீச்சிங் பவுடர், லைசால், ஸ்பிரேயர் மிஷின் வாங்கியதில், முறைகேடு புகார் கூறப்பட்டதால், துறையூர் யூனியன் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை.
திருச்சி மாவட்டம், துறையூர் யூனியன் சார்பில், கொரோனா பரவலை கட்டுப்படுத்த பிளீச்சிங் பவுடர், கிருமிநாசினி சொல்யூசன், பவர் ஸ்பிரேயர் மிஷின் உள்ளிட்ட பொருட்களை ரூபாய் 18 லட்சத்து 44 ஆயிரத்துக்கு வாங்கப்பட்டது. இதில் முறைகேடு நடந்துள்ளதாகவும், அதேபோல் 13 இடங்களில் உயர் கோபுர மின் விளக்குகள் அமைத்ததில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், துறையூர் யூனியன் செங்காட்டுப்பட்டி சுயேட்சை கவுன்சிலர் அசோகன் என்பவர், லஞ்ச ஒழிப்புத்துறை, திருச்சி மாவட்ட ஆட்சியர், திட்ட இயக்குனர், ஊராட்சிகள் உதவி இயக்குனர் ஆகியோருக்கு புகார் அனுப்பினார். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கவுன்சிலர் அசோகன், மதுரை உயர் நீதிமன்ற கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, புகார் தொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர், லஞ்ச ஒழிப்பு போலீசார் மற்றும் ஊராட்சிகள் உதவி இயக்குனர் விசாரித்து, அறிக்கை அளிக்க வேண்டும், என்று உத்தரவிட்டார். அதன் பேரில், நேற்று துறையூர் யூனியன் அலுவலகத்தில், திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் யூனியன் கவுன்சிலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், யூனியன் அலுவலர்கள் என பலரிடம் விசாரித்து, ஆவணங்களை சரிபார்த்தனர். அப்போது, போலியாக ஆவணங்கள் தயாரித்து கொரோனா தடுப்புப் பொருட்கள் வாங்கி மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மேலும் வேறு எது முறைகேடுகளில் ஈடுபட்டு உள்ளார்களா என அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.