திருச்சி வயலூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு ஆய்வு செய்ய வந்த தமிழக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு விடம் கீழ வயலூர் பகுதியில் உள்ள சிவன் கோவில் கடந்த 40 நாட்களாக பூட்டப்பட்டு கிடப்பதாக புகார் தெரிவித்து பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் கோரிக்கை மனு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து அமைச்சர் சேகர் பாபு கீழ வயலூர் பகுதியிலுள்ள வெள்ளந்தாங்கி அம்மன் திருக் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார் பின்பு அருகில் உள்ள அருள்மிகு ஒப்பில்லா மணியம்மை உடனுறை ஸ்ரீ வேதபுரீஸ்வரர் திருக்கோவிலுக்கு நேரில் சென்று பார்த்தபோது சிவன் கோவில் மட்டும் பூட்டு போட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து அங்குள்ள பொதுமக்களிடம் கேட்டார்.
இதுகுறித்து சிவனடியார்கள் கூறுகையில்:-
கீழ வாயிலோர் பகுதியில் உள்ள இரு குடும்பங்களுக்கு இடையே உள்ள பிரச்சினை களால் மட்டுமே சிவன் கோயில் பூட்டப்பட்டுள்ளது. வெள்ளந்தாங்கி அம்மன் கோயில் தனிப்பட்ட பட்டா இடத்தில் அமைந்துள்ளது. இதே ஊரை சேர்ந்த ஒரு சிலர் போலி பட்டா மூலம் சிவன் கோயிலை தங்களுக்கு சொந்தமாக முயற்சி செய்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் 4-ம் தேதி தீபாவளி அன்று சிவன் கோயிலின் இரும்புக் கதவுகளை பூட்டி விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ஊர்பொதுமக்கள் மற்றும் சிவனடியார்கள் மாவட்ட ஆட்சியர் உட்பட அறநிலையத்துறை அதிகாரிகள், காவல்துறை மற்றும் தாசில்தார் ஆகியோரிடம் புகார் அளித்தும்
எவ்வித ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே இந்து அறநிலை துறை அமைச்சரான தங்களிடம் சிவன் கோயிலை உடனடியாக திறக்க கோரியும், மூன்று கால பூஜைகள் நடத்த அனுமதிக்க கோரி அமைச்சர் அவர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டனர். இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறுகையில் இன்னும் இரண்டு நாட்களில் சிவன் கோவிலை திறப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுங்கள் என கோவில் அதிகாரிகளிடம் தெரிவித்து விட்டு சென்றார்.