இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறையின் திருச்சி மாவட்ட சித்த மருத்துவத்துறை சார்பில் 5 – வது தேசிய சித்த மருத்துவ தின விழா திருச்சி புத்தூர் அரசு மாவட்ட தலைமை சித்த மருத்துவமனையில் இன்று (21.12.2021) முதல் வருகிற 23.12.2021 வரை 3 நாட்கள் நடைபெறுகிறது. அகம் 2021 இக்கண்காட்சியை நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே என் நேரு திறந்து வைத்து பார்வையிட்டார். முன்னதாக மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் டாக்டர் காமராஜ் வரவேற்புரை ஆற்றினார் . இந்த மூலிகை கண்காட்சியில் சித்த மருந்துகள் , மூலிகைகள் , மலர்கள் , பாரம்பரிய வாழ்வியல் முறை , உணவு முறைகள் பற்றிய மாபெரும் கண்காட்சியும் , இலவச சித்த மருத்துவ முகாமும் நடைபெறுகிறது . மேலும் கல்லூரி மாணவ , மாணவிகளுக்கான சித்த மருத்துவ கட்டுரை போட்டி . பேச்சுப் போட்டி மற்றும் குறு நாடக போட்டி நடத்தப்படுகிறது .
இந்த கண்காட்சியில் தமிழக நகர்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே என் நேரு பேசுகையில் :-
மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த பேராசிரியர் அன்பழகன் சித்த மருத்துவத்தை 96 வயது வரை பயன்படுத்தி வந்தார். பல நோய்களுக்கு சித்த மருத்துவம் என்பது நிரந்தர தீர்வாகும். மேலும் சித்த மருத்துவக் கல்லூரி திருச்சியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். அதன்படி ஜனவரி 5-ம் தேதி சட்டசபையில் கவர்னர் உரையாற்றுகிறார். முடிந்தால் அந்த உரையில் இந்த கோரிக்கையை சேர்க்க முயற்சிப்பேன். சட்டமன்ற மானிய கோரிக்கையில் நிச்சயமாக இந்த ஆண்டு இடம்பெறும்.
மேலும் 30-ம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் திருச்சிக்கு வருகை தர உள்ளார். அன்று பல நல்ல திட்டங்களை அறிவிக்க உள்ளார். இதன் மூலம் அடுத்த 10-ஆண்டுகளுக்கு பிறகு திருச்சி தமிழகத்தின் மிகப்பெரிய மாநகரமாக ஜொலிக்கும் என தெரிவித்தார். இந்த கண்காட்சியில் மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் பாலகிருஷ்ணன், கலெக்டர் சிவராசு, அரசு மருத்துவமனை டீன் வனிதா, ஆகியோர் கலந்து கொண்டனர்.