திருச்சி பெரிய கடை வீதி, வளையல் கார தெரு பகுதியில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது. மேலும் கடந்த அக்டோபர் மாதம் அந்த தெருவில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மன் கழுத்தில் இருந்த கவரிங் நகைகள் திருடு போனது இதுகுறித்து காந்தி மார்க்கெட் காவல் நிலையத்தில் கோவில் நிர்வாகி புகார் அளித்தார்.
இந்நிலையில் நேற்று இரவு சில வாலிபர்கள் சக்தி மாரியம்மன் கோவில் அருகே மறைந்து இருந்தனர். இதில் ஒருவன் மட்டும் அந்தக் கோயில் மீது ஏறி கொண்டிருப்பதை அந்த வழியாக நடந்து சென்ற ஒருவர் பார்த்து திருடன் திருடன் என கூச்சலிட்டார். அவரின் சத்தம் கேட்டு அந்த தெருவில் உள்ள வீட்டில் இருந்தவர்கள் ஓடி வருவதை கண்டதும் மறைந்திருந்த மற்ற வாலிபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.
ஒரு சிறுவன் மட்டும் பொதுமக்களிடம் மாட்டிக்கொண்டான். அந்த சிறுவனை அருகிலிருந்த கம்பத்தில் கட்டி வைத்த பொதுமக்கள் உடனடியாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர் தகவலின் அடிப்படையில் சம்பவ இடம் வந்த போலீசார் சிறுவனை விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். முதற்கட்ட விசாரணையில் சிறுவன் செங்குளம் காலனி பகுதியை சேர்ந்தவன் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தப்பி ஓடிய மற்ற 7 பேர் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.