திருச்சி மாவட்டம், லால்குடி அருகே கீழரசூர் ஊராட்சியில் கடந்த 16 ந்தேதி ஊரடங்கு காலத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு விழா நடத்தியதனை தடியடி நடத்தி கலைத்த காவல் உதவிஆய்வாளர் இளங்கோவன் மீது தாக்குதல் நடத்திய 9 பேரை கல்லக்குடி போலீசார் கைது செய்தனர்.
லால்குடி அடுத்த புள்ளம்பாடி அருகேயுள்ளது கீழரசூர் ஊராட்சி. இந்த ஊராட்சியில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 16 ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்துவது வழக்கம். அதே போல நிகழாண்டில் ஜனவரி 16 ம் தேதி ஜல்லிக்கட்டு விழா நடத்த திட்டமிட்டனர். தமிழக அரசு கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஊரடங்கு பிறப்பித்த நிலையில் இந்த ஊராட்சியில் ஜல்லிக்கட்டு விழா நடப்பதாக கல்லக்குடி போலீசாருக்கு தகவல் கிடைத்ததின் அடிப்படையில் கல்லக்குடி காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தடியடி நடத்தி ஜல்லிக்கட்டு விழா நடப்பதனை தடுத்து நிறுத்தினர். தடியடி நடத்திய காவல் உதவி ஆய்வாளர் இளங்கோவனை அப் பகுதி மக்கள் கற்கலால் தாக்கியதில் அவரது மண்டை உடைந்து ரத்தம் ஒழுகியது. உடனே சக போலீசார் அவரை மீட்டு லால்குடி அரசு மருத்துவமனையில் முதலுதவி பெற்று மேல் சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்நிலையில் இதே போல கடந்த 3 ஆண்டிற்கு முன் இதே கிராமத்தில் அனுமதியின்றி ஜல்லிக்கட்டு நடத்திய போது, தடியடி நடத்தி கலைத்த அப்போதைய லால்குடி காவல் ஆய்வாளராக பணியாற்றிய பாலாஜி யை கடுமையாக தாக்கியது குறிப்பிடத்தக்கது. காவல் உதவி ஆய்வாளரை தாக்கியது தொடர்பாக திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் தலைமையில் லால்குடி டிஎஸ்பி நமச்சிவாயம், லால்குடிஅனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் மாலதி ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தியதில் கீழரசூர் கிராமத்தைச் சேர்ந்த மணிராஜ் (25), நல்லூசாமி (65), ராஜேந்திரன் (60), மணி (34), ராஜா (38), ராமசுந்தரம் (62), ரமேஸ் (30), விக்னேஸ்குமார் (30), சுரேஷ் (19) ஆகிய 9 பேர் மீது கல்லக்குடி போலீசார் வழக்கு பதிந்து, கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற உத்தரவின் கீழ் அனைவரும் லால்குடி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர். ஊராட்சி மன்றத் தலைவர் மீதும் வழக்கு பதிவு. ஊரடங்கு நேரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உதவிய கீழரசூர் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன் மீது கல்லக்குடி போலீசார் வழக்கு பதிந்து அவரைத் தேடி வருகின்றனர்.