பத்திரிகையாளர் நல வாரியத்தில் அனைத்து மாவட்டத்திற்கும் பிரதிநிதித்துவம் அளிக்க வேண்டும் – என தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் மாநிலத் தலைவர் ஜெயச்சந்திரன் தலைமையில் மாநில பொதுசெயலாளர் பொன்.வல்லரசு, மாநில பொருளாளர் அருண்குமார், மாநில துணை தலைவர் தங்கராஜ் மற்றும் உறுப்பினர்கள் சார்பில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:-
கடந்த அரை நூற்றாண்டுகளாக பேச்சளவில் இருந்த பத்திரிகையாளர் நல வாரியம் தற்போது தமிழக பத்திரிகையாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை செயலுக்கு கொண்டு வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கும், செய்தி துறை அமைச்சர் வெள்ளக்கோவில் சுவாமிநாதன் அவர்களுக்கும் தமிழ்நாடு பிரஸ் எம்ப்ளாயீஸ் யூனியன் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.
அதே வேளையில் ஒன்றிய அரசு அதிகாரத்தை மாநில அரசுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று தி.மு.க.,வை தோற்றுவித்த தலைவர் அறிஞர் அண்ணா முதல் மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி, தற்போதைய தி.மு.க., தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் மற்றும் உதயநிதி ஸ்டாலின் வரை எப்படி எதற்காக போராடி வருகிறார்களோ, அதே போன்று தான் தமிழகத்தின் தலைநகரான சென்னையில் குவிந்துள்ள பத்திரிகையாளர்களுக்கான நல திட்டங்களை வழங்கும் அதிகாரத்தை அனைத்து மாவட்டத்தினருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்று தமிழகத்தில் உள்ள மற்ற மாவட்ட பத்திரிகையார்கள் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம் என்பதை தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம்.
கடந்த ஆண்டுகளில் பத்திரிகையாளர்களுக்கு சலுகைகள் வழங்க ஏற்படுத்தப்பட்ட அமைப்புகளில் சென்னையில் உள்ளவர்களே அதிக அளவில் இடம் பெற்றதால். பத்திரிகையாளர்களுக்கான சலுகைகளையும் சென்னையில் உள்ள பத்திரிகையாளர்கள் மட்டுமே அதிக அளவில் பெற்று பயன்அடைந்து வருகின்றனர். பல தடைகளை இன்னல்களை கடந்தே மற்ற மாவட்டத்தினை சேர்ந்த சிலருக்கு பலன் கிடைக்கிறது என்ற வேதனையான தகவலை தங்களின் மேலான கவணத்திற்கு கொண்டு வர கடமைபட்டுள்ளோம்.
இதற்கு சிறந்த உதாரணமாக தமிழக அரசு பத்திரிகையாளர்களுக்கு வழங்கி வரும் அங்கீகார அடையாள அட்டையை கூறலாம். சென்னையில் மட்டுமே சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் அங்கீகார அட்டை பெற்று சலுகைகளை அனுபவிக்கும் நிலையில் மற்ற மாவட்டங்களில் மாவட்டத்திற்கு 10 பேர் கூட அங்கீகார அடையாள அட்டை பெற முடியாத அவல நிலையே உள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட பத்திரிகைகளிலும் என்ன செய்தி வர வேண்டும் என்பதை சென்னையில் தலைமை பதவியில் உள்ளவர்கள் மட்டுமே நிர்ணயம் செய்த காலங்கள் கடந்து பல ஆண்டுகள் சென்ற நிலையில், கடந்த 30 ஆண்டுகளில் கன்னியாகுமரி, திருச்சி, மதுரை, நெல்லை, கோவை, சேலம், ஈரோடு, நாகை, என்று பல்வேறு முக்கிய மாவட்டங்களில் பதிப்புகளை கொண்டு ஏராளமான செய்திதாள்கள் வெளிவரும் போது மாவட்டம் தோறும், தாலூகா தோறும் நிருபர்கள் நியமிக்கப்பட்ட நிலையில் ஆங்கிலேயேர் காலத்து சட்டம் போன்று சென்னையில் உள்ளவர்கள் மட்டுமே எப்படி பத்திரிகையார்களுக்கான நலவாரியத்தை நிர்வகிக்க முடியும் என்று சாதாரண தாலூகா நிருபருக்கும் கேள்வி எழுகிறது. தமிழகத்தின் முன்னணி பத்திரிகை சில வற்றின் பெயர் மட்டுமே ஒன்றே தவிர அதற்கான உரிமையாளர்களும், நிர்வாகிகளும், செய்தி ஆசிரியர்களும் மாவட்டத்திற்கு மாவட்டம் வேறு வேறு நபர்கள் என்பதை தங்களின் கவனத்திற்கு ஏன் வரவில்லை என்பது எங்களுக்கு ஆச்சியமாக உள்ளது. தமிழக அமைச்சரவையில் சென்னை மற்றும் அதன் சுற்றியுள்ள மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மட்டுமே இடம் பெற்றால் எப்படி இருக்குமோ அது போன்றே தற்போது ஏற்படுத்தப்பட்ட நலவாரியம் உள்ளது.
எனவே தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களும், தமிழகத்தின் செய்தித்துறை அமைச்சராராக உள்ள கொங்கு மண்டலமாம் திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை சேர்ந்த சுவாமிநாதன் அவர்களும் பத்திரிகையாளர் நல வாரியத்தில் திருத்தங்களை கொண்டுவர ஆவன செய்ய வேண்டும் என்று சென்னை தவிர்த்து உள்ள அனைத்து மாவட்ட, தாலூகா பத்திரிகையாளர்கள் சார்பில் தமிழ்நாடு பிரஸ் எப்ளாயீஸ் யூனியன் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு அந்த கோரிக்கை மனுவில் கூறப்பட்டுள்ளது.