திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோயிலில் பங்குனி மாத தெப்ப திருவிழா கடந்த மார்ச் 9-ம் தேதி கொடியேற்றதுடன் தொடங்கி நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் இன்றிரவு நடைபெற்றது. இதனையொட்டி, இன்று மதியம் சுவாமி – அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
தொடர்ந்து இரவு 8 மணி அளவில் தெப்பக்குளத்தில் இருந்த அலங்கரிக்கப்பட்ட தேரில் மட்டுவார் குழலம்மை மற்றும் பஞ்ச மூர்த்திகளுடன், தாயுமான சுவாமி எழுந்தளினார். பின்னர் திருமுறைகள் மற்றும் மங்கள வாத்தியம் முழங்க தெப்ப உற்சவம் தொடங்கி தெப்பக்குளத்தை 5 முறை சுற்றி சுவாமி, பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
இதனை திருச்சி நகர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்திருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் சிவ, சிவ என்ற பக்தி கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். இரவு 10.30 மணிக்கு மேல் தெப்பக்குளத்தில் இருந்து சுவாமி மற்றும் அம்பாள் வெளியே வந்தனர். பின்னர், நந்திகோவில் தெரு, ஆண்டாள் வீதி, சறுக்குப்பாறை வழியாக இரவு 12 மணி அளவில் கோயிலை சென்றடைந்தார்.