திருப்பத்தூர் வாணியம்பாடி அருகே உள்ள புருஷோத்தமகுப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன். தற்போது சென்னையில் உள்ள தனியார் ஐ.டி. நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வருகிறார். இவரின் சொந்த ஊரில் 2ம் கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நேற்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தனது வாக்கை செலுத்துவதற்காக சொந்த ஊருக்கு வந்த ஆனந்தன் தனது வாக்கை பதிவு செய்தார், மேலும் அவர் தனது வீட்டில் தொடர்ந்து செல்போன் மூலம் ஆன்லைன் ரம்மி விளையாடியுள்ளார். இதில் சிறிதளவு பணத்தைப் பெற்றுள்ளதால், மேலும் பணம் கிடைக்கும் என்ற ஆசையில் தனது வங்கி கணக்கில் இருந்து சுமார் 10 லட்சத்தை ஆன்லைன் ரம்மி மூலம் விளையாடி இழந்துள்ளார். மேலும், 6 லட்சம் ரூபாய் வரை கடன் வாங்கியுள்ளார். இது குறித்து அவரது பெற்றோருக்கு தெரியவந்ததை அடுத்து மகனை கடுமையாக கண்டித்துள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த ஆனந்தன் தனது செல்போனை உடைத்துவிட்டு, வீட்டில் உள்ள தனது அறைக்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் ஆனந்தனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இளைஞரின் தற்கொலை குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *