கொரோனா நோய் தொற்று பாதித்த குழந்தைக்கு “வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம்” அளித்த கேரளா மாநிலத்தை சேர்ந்த செவிளியர் தற்போது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு செல்போன் மூலம் மருத்துவர்கள் அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம், புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீஜா. இவர் நன்மணிக்கரா கிராமத்தில் குடும்பநல மையத்தில் செவிளியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் வழக்கம்போல் தனது பணிக்கு செல்வதற்காக செவிளியர் ஸ்ரீஜா வீட்டில் இருந்து கிளம்பியுள்ளார். அப்போது இளம்பெண் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்த 3 வயது குழந்தையை அவர் வீட்டுக்கு அவசர அவசரமாக தூக்கி வந்துள்ளார். அந்த குழந்தை இறந்து விட்டதாக கருதிய குழந்தையின் தாய் கதறி அழுதுள்ளார். குழந்தையை கையில் வாங்கிய செவிளியர் ஸ்ரீஜா, கொரோனா தொற்று பாதிப்பால் தொடர் வாந்தி மற்றும் மூச்சு திணறல் ஏற்பட்டு குழந்தை மயங்கிய நிலையில் இருப்பதை புரிந்து கொண்டுள்ளார்.

செயற்கை சுவாசம் அளிக்காவிட்டால் குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பதால் சுதாரித்துக் கொண்டு உடனடியாக தாயிடம் இருந்து குழந்தையை வாங்கியவர் வாயோடு வாய் வைத்து செயற்கை சுவாசம் அளித்து முதல் உதவி செய்துள்ளார். இப்படி பலமுறை செய்ததால் குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டது. மெதுவாக கண் திறந்து பார்த்தது. பின்னர் குழந்தையை அதன் பெற்றோர் மற்றும் தன் கணவர் பிரமோத் உடன் அவசர சிகிச்சை அளிக்க அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். அங்கு குழந்தைக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்தவ கல்லூரியில் கொரோனா சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவர்கள் கூறுகையில்,”சரியான நேரத்தில் செயற்கை சுவாசம் அளித்ததால் குழந்தையின் உயிரை காப்பாற்ற முடிந்தது” எனக்கூறி செவிலியருக்கு பாராட்டு தெரிவித்தனர்.

குழந்தைக்கு செயற்கை சுவாசம் அளித்து குறித்து செவிலியர் ஸ்ரீஜா கூறுகையில், ”தாயின் தோளில் குழந்தை மயங்கிய நிலையில் இருந்த போதே அதன் நிலையை புரிந்து கொண்டேன். கொரோனா தொற்று பாதிப்பால் ஏற்படும் தொடர் வாந்தியும் மூச்சுத் திணறலும் ஏற்பட்டு குழந்தை மயக்க நிலையில் இருந்தது. கொஞ்சம் தாமதம் செய்தாலும் உயிருக்கு ஆபத்து ஏற்படும் . எனவே, எனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டாலும் பரவாயில்லை என்று கருதி முதல் உதவி சிகிச்சையாக செயற்கை சுவாசம் அளித்தேன். அது மிகவும் பயனளித்தது. குழந்தையின் உயிர்தான் முக்கியம். எனக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்படும் என்று கவலைப்படவில்லை” எனக் தெரிவித்தார். குர்ஆன் அபாயத்தை குழந்தைக்கு முதலுதவி அளித்த செவிலியர் ஸ்ரீஜாவுக்கு மருத்துவர்கள் பொதுமக்கள் அரசு அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *