திருச்சி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையம் இணைந்து நடத்தும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற 5ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ளது.. இது தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் திருச்சியில் உள்ள எஸ்.ஐ.டி கல்லூரியில் நடைபெற்றது. இதில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ.கணேசன் தலைமையில் நடந்த கூட்டத்தில் திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதையடுத்து 5ம் தேதி நடைபெற உள்ள தனியார்துறை வேலை வாய்ப்பு முகாம் குறித்த விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,
தமிழ்நாட்டில் 66 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு அதன் மூலமாக 1,04,000 இளைஞர்களுக்கு தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பை பெற்று தந்துள்ளோம். 5 ஆம் தேதி திருச்சியில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் குறைந்தபட்சம் 5000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்று தருவோம் என்கிற நம்பிக்கையை இருக்கிறது. ஆண்டிற்கு ஒரு லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை முதலமைச்சர் பெற்று தருவார்கள் என்கிற நம்பிக்கை இருக்கிறது. தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பின்பு அரசு ஐ.டி.ஐ களில் 93.79 சதவீதம் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது. குறிப்பாக 51 அரசு ஐ.டி.ஐகளில் நூறு சதவீதம் மாணவர் சேர்க்கை நடந்துள்ளது.
அதற்கு முக்கிய காரணம் நான் முதல்வன் திட்டம் தான். படித்தால் வேலை கிடைக்கும் என்கிற நம்பிக்கை இளைஞர்களிடம் ஏற்பட்டுள்ளது.10,000 கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.400 கோடி செலவில் வீடு கட்டி தர முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளார்கள்.2006-2011 ஆட்சி காலத்தில் அமைப்புசாரா தொழிலாளர்களாக 32 லட்சம் பேர் நல வாரியத்தில் பதிவு செய்திருந்தனர். அது கடந்த 10 ஆண்டுகளில் மிகவும் குறைந்து விட்டது. மீண்டும் தி.மு.க ஆட்சி பொறுப்பேற்ற பிறகு 10 லட்சம் பேர் நல வாரியத்தில் இணைந்துள்ளார்கள்.1,07,000 அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம், கல்வி உதவி தொகை, குடும்ப உதவி தொகை, விபத்து உதவி தொகை போன்ற பல்வேறு நல திட்ட உதவிகள் வழங்கப்படாமல் நிலுவையில் இருந்தது. தி.மு.க ஆட்சி பொறுபெற்ற பின்பு தான் அந்த நலத்திட்டங்களை வழங்கி உள்ளோம் என்றார்.