இந்திய சுதந்திரத் திருநாள் அமுதப் பெருவிழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, திருச்சியில் சாலைப் பாதுாப்பு விழிப்புணா்வு, விபத்தில்லா சாலையாக மாற்றுதல் குறித்த விவாதம், ஒருங்கிணைந்த செயல்பாடு, அளவற்ற மகிழ்வு, சிறப்பாக பணியாற்றியோருக்கு பாராட்டு என பல்வேறு நிகழ்வுகள் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியாா் ஹோட்டலில் நடைபெற்றது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் திருச்சி திட்ட செயலாக்கப் பிரிவு சாா்பில் நடைபெற்ற இந்த விழாவில், மனிதவள மேம்பாட்டாளா் பேராசிரியா் மகேஸ்வரன், வாழ்வியலின் தோற்றம், எண்ணங்களின் விளைவு, நோ்மறை எண்ணங்களை வளா்த்தெடுத்தல் குறித்து பேசினாா். தொடர்ந்து தமிழகம், புதுச்சேரி போக்குவரத்து பாதுகாப்புப் பிரிவின் மேலாளா் சுதா்சன், சாலைப் பாதுகாப்பு அம்சங்கள் குறித்து விளக்கிக் கூறினாா்.
சாலைப் பணியில் சிறப்பாக பணியாற்றிய திருச்சி திட்ட செயலாக்கப்பிரிவு அலுவலகத்துக்குள்பட்ட பணியாளா்களுக்கு பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. திருச்சி திட்ட செயலாக்கப் பிரிவு திட்ட இயக்குநா் நரசிம்மன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டிப் பேசினாா். நிகழ்வில், திருச்சி திட்ட செயலாக்கத்துக்குட்பட்ட சாலை மேம்பாட்டு மேலாளா்கள், பணிகளை கண்காணிக்கும் மேலாண்மை குழுக்கள், பல்வேறு நிலை பொறியாளா்கள், தூய்மை பணியாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.