தமிழகத்தின் முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணா அவர்களின் 114-வது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் திருச்சி மாவட்ட அளவிலான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கம் ரேஸ்கோர்ஸ் சாலையில் இன்று காலை நடைபெற்றது.
இந்த மிதிவண்டி போட்டியில் பங்கேற்பதற்காக திருச்சி மாவட்டத்திலிருந்து பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 300-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு போட்டியில் பங்கேற்றனர். இந்நிலையில் 10 கிலோமீட்டர் தூரத்திற்கான மிதிவண்டி போட்டியில் பங்கேற்ற மாணவிகள் போட்டியை முடித்து எல்லைக்கோட்டை வந்து அடைந்தபோது அதில் ஒரு சில மாணவிகள் உடல் சோர்வு அடைந்து மிதிவண்டியுடன் மயங்கி விழுந்தனர்.
மயங்கி விழுந்த மாணவிகளுக்கு முதலுதவி அளிக்க அங்கு முதலுதவி பெட்டி இல்லாததாலும் மேலும் சோர்வடைந்த மாணவிகளுக்கு குளுக்கோஸ் உள்ளிட்ட உடலுக்கு சக்தி கொடுக்க கூடியது பொருட்கள் இல்லாமலும்.
மேலும் ஏற்கனவே அங்கு இருந்த 108 ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனம் போட்டியில் பங்கேற்றவர்களுடன் பின் சென்றதால் மாணவிகளுக்கு முதலுதவி அளிக்க முடியாமல் பெற்றோர் மிகுந்த வேதனை அடைந்தனர்.
உடனடியாக இது குறித்து மிதிவண்டி போட்டியை நடத்திய விளையாட்டு துறை அதிகாரிகளிடம் தெரிவித்தனர். அதன் பிறகு அங்கு முதலுதவி பெட்டி மற்றும் 108 ஆம்புலன்ஸ் இருசக்கர வாகனம் வரவழைக்கப்பட்டது.
இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கூறுகையில் இனி வரும் காலங்களில் இது போன்ற அரசு நடத்தும் விளையாட்டு போட்டிகளில் முதலுதவிக்கான ஏற்பாடுகளை விளையாட்டுத்துறை அதிகாரிகள் முறையாக செய்ய வேண்டும் என்று கோரிக்கை முன் வைத்தனர்.