திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி ஆற்றில் தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம் மற்றும் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் இணைந்து நடத்திய வெள்ளம் ஏற்படும்போது மேற்கொள்ளப்படும் மீட்பு நடவடிக்கைகளின் ஒத்திகைப் பயிற்சியினை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார். இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநகராட்சி ஆணையர் டாக்டர் வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர் பழனியாண்டி, மாவட்ட தீயணைப்புத்துறை அலுவலர். அம்பிகா, கோட்டத்தலைவர் ஆண்டாள் ராம்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
பிரதீப் குமார் பேட்டி:
வெள்ள காலங்களில் போது வெள்ளத்தில் சிக்கியவர்களை மீட்பது எவ்வாறு என்பது குறித்து தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் இன்று ஒத்திகை நடைபெற்று வருகிறது. திருச்சி மாவட்டத்தில் 5 இடங்களில் நடைபெறுகிறது. ஒரு லட்சத்து 46 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது தற்போது திருச்சியில் அபாய கட்டம் ஏதுமில்லை. கடந்த முறை வெள்ளத்தில் 88 ஹெக்டேர் விவசாய நிலம் சேதமடைந்துள்ளது. ஆனால் தற்போது ஏதும் சேதம் அடையவில்லை என்றார்.
அமைச்சர் கே.என்.நேரு பேட்டி:
சென்னை மழை வெள்ளப் பாதிப்புகளை தடுக்கும் வகையில் 937 கோடி மதிப்பீட்டில் பணி நடைபெற்று வருகிறது. வயர்கள் அதிகம் செல்வதால், மெட்ரோ வாட்டர் மற்றும் பாதாள சாக்கடை பணிகள் நடைபெறுவதால் இதனைத் தாண்டி பணிகள் நடைபெறுகிறது. ஒப்பந்தக்காரர்களிடம் பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப் பட்டுள்ளதுடன், பணிகள் விரைந்து நடைபெறுகிறது. சென்னை மாநகராட்சி அதிகாரிகள் முழுக்க முழுக்க கவனத்தில் ஈடுபட்டு வருகின்றனர். வெள்ளத்தில் பாதுகாத்த வகையில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
திருச்சி மாநகராட்சியில் இணைப்பு சாலைகள், பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் திட்ட பணிகள் நடைபெறுவதால் சாலை அமைக்கும் பணி தாமதம் ஏற்பட்டுள்ளது. பணிகள் முடிந்த இடங்களில் 576 சாலைகள் போட வேண்டிய இடத்தில் 276 சாலைகள் போடப்பட்டுள்ளது. தொடர்ந்து மாநகராட்சி மேயர் ஆய்வு செய்து கொண்டிருக்கிறார். அதேபோன்று பணிகளும் முடுக்கி விடப்பட்டுள்ளது என அமைச்சர் கே.என் நேரு தெரிவித்தார்.