மனிதம் சமூகப் பணி மையம் மற்றும் அறக்கட்டளை சார்பில் ஆண்டுதோறும் ஆதரவற்ற குழந்தைகள், முதியோர்கள் மற்றும் சமூகத்தில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களை ஒன்றிணைத்து கொண்டாடப்படும் மனிதம் இன்பஒளி நிகழ்ச்சியின் 10ஆம் ஆண்டு விழா, திருச்சி வெஸ்ட்ரி சிபிஎஸ்இ பள்ளி, Schwartz Hall-ல் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக எக்ஸெல் குழும தலைவர் முருகானந்தம் அவர்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தார். சிறப்பு அழைப்பாளர்களாக பத்மஸ்ரீ சுப்புராமன் அவர்கள், நேஷனல் கல்லூரி முதல்வர் டாக்டர் பிரசன்ன பாலாஜி அவர்கள், வாய்ஸ் அறக்கட்டளையைச் சேர்ந்த கிரிகோரி அவர்கள், கல்வி கட்டணம் அறக்கட்டளையைச் சேர்ந்த கார்த்திக் பாண்டியன் அவர்கள், கங்காரு அறக்கட்டளை நிறுவனர் ராஜா அவர்கள் உள்ளிட்ட பல்வேறு சமூக ஆர்வலர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

மனிதம் முதியோர் இல்லத்தைச் சேர்ந்த முதியோர்கள், குழந்தைகள், நலத்திட்டப் பயனாளிகள், தன்னார்வலர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் நண்பர்கள் என 350-க்கும் மேற்பட்டோர் இவ்விழாவில் பங்கேற்றனர். விழாவின் சிறப்பம்சமாக, குழந்தைகளுக்கு புத்தாடைகள், இனிப்புகள் மற்றும் தீபாவளிப் பட்டாசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் எம். முருகானந்தம் அவர்கள் குழந்தைகளுக்கு இப்பரிசுகளை வழங்கி அவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டார். இதனால் குழந்தைகளின் முகங்களில் எல்லையற்ற மகிழ்ச்சியும் உற்சாகமும் காணப்பட்டது.

மேலும், முதியோர்களும் குழந்தைகளும் ஒன்றிணைந்து பங்கேற்ற ஆடல், பாடல் மற்றும் கலைநிகழ்ச்சிகள் விழாவிற்கு மேலும் சிறப்புச் சேர்த்தன. வயது வித்தியாசமின்றி அனைவரும் ஒன்றாகக் கொண்டாடி மகிழ்ந்த இந்நிகழ்வு, அன்பு, பாசம், மனிதநேயம் மற்றும் சமூக ஒற்றுமையின் அடையாளமாக அமைந்தது. ஆதரவற்ற குழந்தைகளும் முதியோர்களும் தனிமையில் இல்லை; அவர்களுக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்ளவும், பண்டிகைகளைக் கொண்டாடவும் ஒரு பெரிய குடும்பம் இருக்கிறது என்ற மனிதநேயச் சிந்தனையை வலியுறுத்தும் வகையில் மனிதம் இன்பஒளி நிகழ்ச்சி தொடர்ந்து நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிகழ்ச்சியின் 10ஆம் ஆண்டு நிறைவு விழா அனைவருக்கும் இரவு உணவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து இனிதே நிறைவடைந்தது. இந்நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்துவதற்கு உறுதுணையாக இருந்த சிறப்பு விருந்தினர்கள், சிறப்பு அழைப்பாளர்கள், நன்கொடையாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனிதம் சமூகப் பணி மையம் மற்றும் அறக்கட்டளை சார்பில் நன்றியும் பாராட்டுகளும் தெரிவிக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மனிதம் சமூகப் பணி மையம் மற்றும் அறக்கட்டளை நிறுவனர் மற்றும் இயக்குனருமான தினேஷ் குமார் மற்றும் அவரது குழுவினர் செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தற்போதைய செய்திகள்