திருச்சி கம்பரசம்பேட்டை அய்யாளம்மன் படித்துறை அருகில் ஸ்ரீரங்கம் கோயிலுக்குச் சொந்தமான கோசாலை உள்ளது. இங்குள்ள பசு மற்றும் காளை மாடுகளை 47 பயனாளிகளுக்கு தலா ஒரு பசுவும், ஒரு கன்று என 94 மாடுகளும், 18 பயனாளிகளுக்கு தலா பசு ஒன்றும், 5 பயனாளிகளுக்கு தலா இரண்டு காளை மாடுகள் என மொத்தம் 70 பயனாளிகளுக்கு 122 மாடுகளை பச்சைமலையில் உள்ள பழங்குடியின மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு இன்று வழங்கப்பட்டது. இந்நிகழ்வில்நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே. என். நேரு, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் உள்ளிட்டோர் இணைந்து பசுக்களை வழங்கினார்கள். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் நேரு கூறியதாவது: ஸ்ரீரங்கம் பகுதியில் வினியோகிக்கப்படும் குடிநீர் கலங்கலாக வருவதாக எம்.எல்.ஏ கூறிய புகாரை ஏற்று, அதனை சரி செய்ய ரூ.5 கோடி செலவில் தண்ணீர் தூய்மை செய்து வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. விரைவில் தூய்மையான குடிநீர் கிடைக்கும் , அடிக்கடி மழை பெய்து வருவதால் நகரம் முழுவதும் தார் சாலைகள் அமைப்பதில் காலதாமதம் ஏற்படுகிறது. பகல் நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் என்பதால் இரவு நேரங்களில் மட்டுமே சாலைகள் போடும் பணி நடைபெறுகிறது.