இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி தமிழ்நாட்டில் பாராளுமன்றப் பொதுத்தேர்தல்-2024 வருகின்ற 19.04.2024 அன்று நடைபெறவுள்ளதை முன்னிட்டு இத்தேர்தலில் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு வாக்காளர்களும் தங்களது ஜனநாயகக் கடமையினை ஆற்றிட வேண்டும் என்பதனை வலியுறுத்தும் விதமாக திருச்சி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் ஓட்டம், 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என்பதனை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி, ரங்கோலி கோலம் வரைதல், வாகனங்கள் மற்றும் குடிநீர் கேன்களில் விழிப்புணர்வு ஒட்டுவில்லைகளை ஒட்டுதல், 85 வயதிற்கு மேல் உள்ள வாக்காளர்களின் இல்லங்களுக்கு சென்று அழைப்பிதழ்கள் வழங்குதல்,

அனைத்து வாக்காளர்களுக்கும் வாக்காளர் தகவல் சீட்டு மற்றும் வாக்காளர் கையேடு வழங்குதல், இராட்சத பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், தோட்டக்கலைத்துறையின் சார்பில் தானியங்கள், நறுமண பயிர்களான வெந்தயம், கசகசா மற்றும் கருஞ்சீரகத்தைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ள விழிப்புணர்வு இலட்சினையை பொதுமக்களின் பார்வைக்காக அமைத்தல் மற்றும் காய்கள், கீரை வகைகள் மற்றும் பழங்கள் கொண்டு அமைக்கப்பட்டுள்ள தேர்தல் விழிப்புணர்வு இலட்சினை மற்றும் பழங்களில் விழிப்புணர்வு வாசகங்கள் செதுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படுவது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளிலும் தொடர்ந்து, நடைபெற்று வருகின்றது.

அதனடிப்படையில் இன்று காலை திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியில் 5000 மாணவியர்கள் கலந்து கொண்டு வாக்காளர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய ஹீலியம் பலூன்களை வானில் பறக்க விட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்வை திருச்சி மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித்தலைவருமான பிரதீப் குமார் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து,வாக்காளர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்நிகழ்வில், துணை ஆட்சியர் வேலுமணி, முதன்மை கல்வி அலுவலர் கிருஷ்ணப்பிரியா, மாநகராட்சி ஜெயபாரதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *