விமன் இந்தியா மூவ்மெண்டின் மாநில செயற்குழு கூட்டம் திருச்சி மாவட்ட எஸ்டிபிஐ அலுவலகத்தில் விமன் இந்தியா மூவ்மெண்ட்டின் மாநில தலைவர் பாத்திமா கனி தலைமையில் இன்று நடைபெற்றது. முன்னதாக விம் மாநில செயற்குழு உறுப்பினர் சுலைஹா வரவேற்புரையாற்றினார். இக்கூட்டத்திற்கு விம் மாநில பொதுச் செயலாளர் பாய்ஜா ஷஃபிக்கா, மாநிலச் செயலாளர், தஸ்லிமா, மாநில செயற்குழு உறுப்பினர்கள் கதீஜா, ஜபீன் பானு, சுலைஹா ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர். இக் கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக விம் மாநில ஒருங்கிணைப்பாளர் அம்ஜத் பாஷா அவர்கள் கலந்து கொண்டு விமன் இந்தியா மூவ்மெண்டின் அடுத்த கட்ட வளர்ச்சி,பெண்கள் எதிர் கொள்ளும் சவால்கள் பற்றி விவரித்தார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
பள்ளி மாணவிகள், சிறுமிகள் மீது பாலியல் வன்கொடுமைகள் தொடர்ந்து அதிகரித்து கொண்டே இருக்கிறது. இதனால் பாதிக்கப்பட்ட சிறுமிகள் மன அழுத்தத்திற்கு ஆளாகி, தற்கொலையில் ஈடுபடுகின்றன. இது மிகவும் கண்டிக்கத்தக்கது. மாநில மகளிர் ஆணையம் இந்த விவகாரத்தில் தலையிட்டு நீதிl நிலைநாட்டப்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கோவை மத்திய சிறையில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள இஸ்லாமிய சிறைவாசிகளின் குடும்பம், அவர்களை பிரிந்து, இன்றளவும் மீளா துயரத்தில் தத்தளித்து கொண்டிருக்கிறது. அவர்களின் குடும்பம், மனைவி, குழந்தைகள் படும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அறிஞர் அண்ணாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, நீண்ட காலமாக சிறையில் வாடும் சிறைவாசிகளுக்கு விடுதலை அளிக்க வேண்டும், இல்லையென்றால் தமிழக தலைமைச் செயலகம் மற்றும் ஒவ்வொரு சட்டமன்ற அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும்,
தமிழக அரசின் மின் கட்டண உயர்வு, அத்தியாவசிய பொருட்கள் மீதான அநியாயமான விலை உயர்வு, வரி விதிப்பு சாமானிய மக்களையும், சிறு, குறு தொழில் செய்பவர்களையும் மிக கடுமையாக பாதித்துள்ளது. இதனை விமன் இந்தியா மூவ்மெண்ட் கடுமையாக கண்டிக்கிறது. இடைவிடாத விலைவாசி உயர்வை தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும், தமிழக முதல்வர் அவர்களால் துவங்கி வைக்கப்பட்டுள்ள பள்ளி மாணவர்களுக்கான ‘காலை சிற்றுண்டி’ திட்டம் மூலம் தமிழகத்தில் பள்ளிக்கு செல்லும் 1.14 வட்சம் குழந்தைகள் பயனடைவார்கள். இத்திட்டத்தை துவக்கி வைத்த தமிழக அரசுக்கும், தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் விமன் இந்தியா மூவ்மெண்ட் சார்பாக பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறது.
அதேபோல் மாணவ சமுதாயம் போதை மது போன்ற பழக்கங்களால் சமூக சீர்கேட்டில் ஈடுபடுகின்றனர் இதனால் போதை தடுப்பு சட்டத்தை வலுப்படுத்த தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தற்போது தமிழகத்தில் ‘இன்புளுவன்சா’ காய்ச்சல் அதிக அளவில் பரவிக்கொண்டிருக்கிறது. இதனை கட்டுப்பாட்டில் கொண்டுவர மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையும் தமிழக அரசும் தக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விமன் இந்தியா மூவ்மெண்ட் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மாநில செயற்குழு உறுப்பினர் கதீஜா நன்றியுரை ஆற்றினார்.