ஆண்டுதோறும் ஆடி மாதம் 18ஆம் நாள் காவிரி கரையோர மாவட்டங்களில் நடைபெறும் ஆடிப்பெருக்கு விழாவில் காவிரி அன்னைக்கு பூஜைகள் நடத்தி வழிபாடு செய்யப்படுகிறது.
அந்த வகையில் உலக நன்மைக்காகவும், காவிரியில் நீர் வற்றாமல் இருப்பதற்காக காவிரி தாய்க்கு சீர் வழங்கும் நிகழ்ச்சி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டப படித்துறையில் இன்று மாலை நடைபெற்றது.
இந்த சிறப்பு பூஜை செய்வதற்காக விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் மகளிர் அணியின் சார்பில் மூன்றாம் ஆண்டாக நடைபெற்ற இந்நிகழ்வில் பூக்கள், பால், சந்தனம், பழங்கள், காய்கறிகள், நவதானியங்கள், மஞ்சள், குங்குமம், பட்டுப்புடவை, வளையல் உள்ளிட்ட 150 வகையான சீர் வரிசை பொருட்களை பெண்கள் தட்டில் வைத்து ஏந்தியவாறு ஸ்ரீரங்கம்-அம்மா மண்டபம் சாலையில் ஊர்வலமாக எடுத்து வந்தனர்.
பின்னர் பூஜை செய்யப்பட்டு சீர் வரிசை பொருட்கள் காவிரி ஆற்றில் விடப்பட்டது. இந்நிகழ்விற்கு மகளிர் அணியின் தலைவர் ஜெயந்தி தலைமை வகித்தார். கோட்ட செயலாளர் தர்மராஜ் முன்னிலை வகித்தார். மாநில அமைப்பாளர் சாவித்திரி மற்றும் இணை அமைப்பாளர் கீதாஞ்சலி ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டனர்.
மேலும் இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் சீனிவாசன், துணை செயலாளர் சித்ரா, பாஜக மாவட்ட செயலாளர் ராஜசேகர் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.