திருச்சி மாநகராட்சியில் இன்று முதன் முறையாக மேயர் அன்பழகன் தலைமையில் மக்கள் குறைதீர்‌நாள் கூட்டம் நடைபெற்றது. அப்போது மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் பகுதியில் உள்ள குறைபாடுகளை மனுவாக எழுதி அளிக்க வந்திருந்தனர். மேயர் அன்பழகன் துணை மேயர் திவ்யா மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் ஆகியோர் மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் வரவுக்காக நீண்ட நேரம் காத்திருந்தனர்.

இவர்கள் மட்டும் அல்லாது மனு அளிக்க வந்த பொதுமக்கள் நீண்ட நேரம் நீண்ட வரிசையில் காத்திருப்பதை கண்ட மேயர் அன்பழகன் உடனடியாக மனு அளிக்க வந்தவர்களை உள்ளே அழைத்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உடனடி நடவடிக்கை மேற்கொள்வதாக உறுதியளித்தார்.

அதற்குப் பிறகு வந்த மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் இந்த குறைதீர் கூட்டத்தில் திருச்சி மாநகராட்சிக்கு உட்பட்ட 65 வார்டுகளில் இருந்தும் பலர் நேரில் வந்து தங்கள் பகுதியில் உள்ள பிரச்சனைகள் குறித்தும் அடிப்படை வசதிகளான சாலை வசதி குடிநீர் வசதி கேட்டு மனு அளித்து சென்றனர்.

இந்த முகாமில் மனு அளிக்க வந்த திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு மாநகராட்சி கமிஷனர் முஜிபூர் ரகுமான் வந்ததற்கு பிறகு கோரிக்கை மனு அளிப்பேன் என மேயர் அன்பழகனிடம் கூறி நீண்ட நேரம் காத்திருந்தார். சிறிது நேரத்திற்கு பிறகு வந்த கமிஷனர் மற்றும் மேயரிடம் மனு அளித்தார். அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது.

மாநகராட்சி பகுதிக்கு உட்பட்ட பல தரைக்கடை வியாபாரிகள் இடம் மாநகராட்சியின் பெயரை கூறியும் காவல்துறையின் பெயரை கூறியும் பலர் பணமாகவும் பொருளாகவும் வசூல் நடத்தி வருகின்றனர். எனவே அவற்றை தடுக்க மாநகராட்சி ஆணையர் மற்றும் மேயர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று திருச்சி மாநகராட்சியின் முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு இன்று மேயரிடம் ஆணையரிடம் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதன்பின் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய முன்னாள் மேயர் எமிலி ரிச்சர்டு நான் மாநகராட்சியின் மேயராக இருந்தபோது தரைக்கடை வியாபாரிகள் என்று ஒரு அடையாள அட்டையை உருவாக்கி அதன் மூலம் அவர்கள் கடை நடத்துவதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளேன் எனவே தற்போது இப்படிப்பட்ட குற்றச் செயல்களை தடுக்க மாநகராட்சி உடனடியாக நடவடிக்கை எடுத்து வியாபாரிகளை காப்பாற்ற வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்துள்ளதாக தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *